Published : 03 Oct 2017 09:45 AM
Last Updated : 03 Oct 2017 09:45 AM

காலத்தின் தேவை கல்வியாளர் காந்தி!

148வது காந்தி ஜெயந்தி

 

காந்தியை வழிபடும் போக்கு ஒரு புறம், அவரைக் கடுமையாக விமர்சிக்கும் போக்கு மறுபுறம் என்பது வழக்கமாகிவிட்டது இன்று. அவருடைய அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதல்ல என்ற நிலைப்பாடு நேரு காலத்திலேயே தோன்றிவிட்டது. ஆனால், காந்தியை வாசிக்கத் தொடங்கினால் ஒவ்வொருவர் மனதிலும் அது சரிதானா என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்படும். அதுவும் கல்வி குறித்து அவர் முன்வைத்த தத்துவங்களும் செயல்திட்டங்களும் இன்று கல்வி வணிகமாகி, ஏழைகளுக்கு எட்டா கனியாகிவிட்டச் சூழலில், கல்வி குறித்த புரிதலில் நாம் எங்குத் தவறு செய்தோம் என்பதைக் கண்டிப்பாக உணர்த்தும்.

புதிய கல்வித்திட்டம்

காந்தியின் பிரகடனங்கள் எதுவுமே புத்தகங்களை மட்டும் சார்ந்தோ அல்லது அவரது சிந்தனையின் வெளிப்பாடாக மட்டுமோ இல்லை. அவை அனுபவ வெளியில் பரிசோதிக்கப்பட்டவை. அதேபோல அவை அனுபவ வெளிக் கடந்த சித்தாந்தக் கோட்பாடுகளும் அல்ல.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவுடன் அவர் முதல் வேலையாக செய்தது என்ன தெரியுமா? அன்றைய இந்தியக் கல்வித் திட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதே. அதன் விளைவாக, புதிய கல்வித் திட்டத்தை உருவாக்கினார். அதற்குப் பின்னர், வார்தா மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஒப்புதலும் அதற்குப் பெறப்பட்டது. 1915-ல் இந்தியா திரும்பியவர் 1917-ல் அகமதாபாத்தில் தன்னுடைய அடிப்படைக் கல்வி மற்றும் புதிய கல்வி எனும் கொள்கைகளின்படி புதிய பள்ளிகளைத் தொடங்கினார். இதே போன்று 1921-ல் குஜராத்தில் ‘குஜராத் வித்யா பீடம்’ என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

தாய் மொழிக் கல்வி

கல்விதான் நாட்டையும், குடிமக்களையும் மேம்படுத்தும், அதுவும் பள்ளிக் கல்வி அதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என உறுதியாக நம்பியவர் காந்தி. அதற்காக, லண்டனில் பாரிஸ்டர் பட்டம் படித்தபின்பும், ஆங்கிலப் புலமை பெற்றபின்பும் ஆங்கில வழிக் கல்விதான் இந்தியாவுக்குப் பொருத்தமானது என நினைக்கவில்லை அவர்.

ஆங்கிலேயர் வழங்கிய கல்வியை முற்றும் எதிர்த்தார். ஒவ்வொருவரும் தாய்மொழி வழியாகத்தான் பள்ளியில் கல்வி பயிலவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் இந்தியாவில் இன்றுவரை தாய்மொழி வழிக் கல்வி என்பது பெரிய அளவில் வெற்றி பெற இயலாமலேயே இருக்கின்றது.

இலவசக் கட்டாயக் கல்வி

அரசு, 7 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிக் கல்வியை அவரவர் தாய்மொழியில் இலவசமாகக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்ற முற்போக்கு முழக்கத்தை முன்வைத்தார். ஆனால் ஆரம்பக்கல்வியில், ஏட்டுக் கல்வி கண்டிப்பாக உதவாது என்பதையும் வலியுறுத்தினார். எடுத்தவுடன் சிறாருக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுப்பது ஒரு வகை சித்திரவதை. மாறாக அவர்களுக்கு ஓவியம், இசை, எளிமையான கைவினைப் பயிற்சிகள், வரலாறு செல்லித்தரவேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு.

தன்னம்பிக்கை

“கல்வி என்ற பெயரில் மூளைக்குள்ளே தகவல்களைத் திணிப்பதனால் அறிவாளிகளையோ, சிறந்த மாணவர்களையோ உருவாக்கவிட முடியாது. வெறும் எழுத்தறிவு மட்டுமே கண்டிப்பாக அறத்தை ஊட்டாது. நற்பண்பு வளர்ச்சி என்பது எழுதப் படிக்கத் தெரிந்தால் வந்துவிடும் என்பது தவறு. துணிவு, அறத்தெளிவு, தன்னம்பிக்கை ஆகியவற்றை ஊட்டாத கல்வியைப் பெறும் சிறார்கள், மெழுகுச்சிலை போன்று அழகாக இருப்பார்கள். ஆனால் வாழ்க்கை நெருக்கடிகள் வரும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் உருகிவிடுவார்கள். எனவே, வாழ்வின் சாவல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொடுக்கும் கல்வியே நமக்குத் தேவை” என்ற காந்தியின் வரிகளை இன்றைய கல்வியாளர்கள் கவனிக்கவேண்டிய அவசியம் உள்ளது. இன்று உலகில் அதிக அளவில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாக, அதுவும் ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இந்தியா இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. இதற்கு அடிப்படை காரணம் நாம் கடைபிடிக்கும் கல்வித் திட்டமே. இதைத்தான் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

மதம் சாரா ஆன்மிகக் கல்வி

மதம் சார்ந்த எந்தக் கல்வியும் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படக் கூடாது என்பதில் காந்தி உறுதியாகஇருந்தார். சமயம் என்பது தனிமனிதனின் வாழ்வு குறித்தது. அதைக் கல்வியில் புகுத்துவது தவறு. அதேபோல அரசு மதம் சார்ந்த நிறுவனங்களுக்கு எந்த வித நிதி உதவிகளையும் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டிலும் கண்டிப்பாக இருந்தார். அவரைப் பொறுத்தவரை, அறம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. ஆனால் சத்தியம், அகிம்சை போன்ற மதிப்பீடுகளை மாணவர் மனங்களில் விதைக்க வேண்டும் அதற்கு ஆன்மிகக் கல்வி தேவை.

அந்த ஆன்மிகக் கல்வி என்பது சமயக் கல்வி அல்ல. அது மனத்தை வளப்படுத்தும், மனிதரை நெறிப்படுத்தும் கல்வி என்றார். அதனால்தான் கல்வி என்பது மண்ணின் பண்பாட்டிலிருந்து தொடங்கப்படவேண்டும் என்றும், பள்ளிகளில் கண்டிப்பாகக் கைவினைக் கல்வி கற்றுத்தரப்படவேண்டும் என்றும் கூறினார். அதன்படியே தன் பள்ளிகளில், கைத்தறி நெசவு, தோட்டக்கலை, தச்சு வேலை, தோல் பணி போன்ற பல விதமான கைவினைப் பயிற்சிகளை அறிமுகப்படுத்தினார்.

ஆசிரியர்களின் பங்கு

பாடத்திட்டம் என்பது சற்றுத் தளர்வுடன் இருப்பது அவசியம். அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். மாணவர்களுக்குத் தேர்வு அச்சத்தை ஊட்டும் வகையில் பாடத்திட்டமும். கற்பித்தல் முறையும் அமையக்கூடாது. அவ்வப்போதுத் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாறுதல் செய்ய ஆசிரியருக்கு உரிமை உண்டு. கற்பிக்கும் சூழலையும் ஆசிரியர் தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்ளலாம். மாணவர்களின் நலனுக்காக மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பாகவும் தன்னுடைய பணியை ஆசிரியர் கொள்ளவேண்டும் என்பதையும், மாணவர்களை எந்த வகையிலும் கட்டாயப்படுத்தாமல் கற்பிக்க வேண்டும் என்பதையும் காந்தி வலியுறுத்துகிறார். நாம் இன்று எவ்வாறு எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது.

கைவினைக் கல்வியும் சாதி மனோபாவ ஒழிப்பும்

கைவினைக் கல்வி என்பது மாணவர்களைப் பண்படுத்தும். உழைப்பை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும். அது சாதி வேறுபாடு பார்க்கும் மனநிலையையும் ஒழிக்கும். திறன் வளர்ச்சியானது இத்தகைய கல்வியின் மூலம்தான் சாத்தியமாகும். மாணவர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கல்வியகங்கள் நிறுவனச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம் மாணவர்களுக்கும் தங்கள் உழைப்பினால்தான் கல்வி கற்கிறோம், இலவசமாக அல்ல என்ற சுயமரியாதை உணர்வும் உண்டாகும் என்றெல்லாம் கூறிய காந்தி, நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு அரசு கல்விக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல, பல்கலைக்கழகங்களும் தொடங்க வேண்டும், அவை அந்தப் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவர் சொன்னது இன்றும் பொருத்தமானதுதான். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்காக லாபம் ஈட்ட உதவும் தொழிலாளிகளை உருவாக்குவதும் அதன் மூலம் பணம் சம்பாதிப்பதும்தான் நகர்ப்புறத்தை ஒட்டி அமைந்துள்ள பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பிரதான நோக்கமாக இன்று உள்ளது.

1964-1966-ல் அமைக்கப்பட்ட கல்வித்திட்டக் கமிஷன், காந்தியின் அடிப்படைக் கல்வி முன்வைத்த மாணவர்களுக்கான பணி அனுபவம், கூட்டுச் சமூக வாழ்க்கை, சமூக சேவை உணர்வு, படிப்பறிவுக்கும் பட்டறிவுக்குமான ஒருங்கிணைப்பு, தொழிற்கல்வி போன்ற பல அம்சங்களை ஏற்று அவற்றைத் தன்னுடைய பரிந்துரைகளில் பதிவு செய்தது. யுனெஸ்கோவின் தொடக்கக் கல்விக்கான குழுவும் காந்தியின் கல்வித் திட்டங்களைத் தன்னுடைய அறிக்கையில் பதிவுசெய்து செயல்பாட்டிற்காகப் பரிந்துரைத்தது.

அவரைப் பொருத்தமட்டில் சமூக அக்கறையும் நேர்மையும் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே உண்மையான கல்வி. ஆனால், ‘வலியவன் வாழ்வான்’ என்ற வகையில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பைத்தான் இன்றைய கல்வித்திட்டம் கொடுத்துவருகிறது. இந்நிலையில் இருந்து இந்தியக் கல்வியை மீட்டெடுக்க காந்தி என்னும் கல்வியாளர் காலத்தின் தேவை!

 

புதிய கல்விக் கொள்கையைத் தீட்டி குஜராத்தில் புதிய பள்ளிகள், ‘குஜராத் வித்யா பீடம்’ பல்கலைக்கழகத்தை காந்தி நிறுவினார்.

மனத்தை வளப்படுத்தும், மனிதரை நெறிப்படுத்தும் கல்விதான் ஆன்மிக கல்வி. அது சமயக் கல்வி அல்ல.

மாணவர்களை எந்த வகையிலும் கட்டாயப்படுத்தாமல் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்.

கைவினைக் கல்வி, சாதி வேறுபாடு பார்க்கும் மனநிலையை ஒழிக்கும்.

 

கட்டுரையாளர், தத்துவப் பேராசிரியர்,
கல்லூரி முன்னாள் முதல்வர் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x