Published : 13 May 2023 05:02 AM
Last Updated : 13 May 2023 05:02 AM
சென்னை: சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. 10-ம் வகுப்பில் 93.12 சதவீதம் பேரும், 12-ம் வகுப்பில் 87.33 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலம் இதில் 3-ம் இடத்தை பிடித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 தேர்வுகள் கடந்த பிப்.15-ம் தேதி தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடந்தன. நாடு முழுவதும் 16,728 பள்ளிகளில் இருந்து 16.61 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது விடைத்தாள்கள் நாடு முழுவதும் 3,578 மையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. இப்பணியில் 1.55 லட்சம் ஆசிரியர்கள்,பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று காலை 11 மணி அளவில் இணையதளத்தில் (www.cbseresults.nic.in) வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களில் 14.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 87.33 சதவீதம். மாணவிகள் 90.68 சதவீதம் பேரும், மாணவர்கள் 84.67 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி 6.01 சதவீதம் அதிகம். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 92.71 சதவீதமாக இருந்தது. அது தற்போது 5.38 சதவீதம் குறைந்துள்ளது.
மொத்தம் உள்ள 16 மண்டலங்களில் கேரளா, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய திருவனந்தபுரம் மண்டலம் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தையும் (99.91 சதவீதம்), கர்நாடகாவை உள்ளடக்கிய பெங்களூரு மண்டலம் 2-ம் இடத்தையும் (98.64 சதவீதம்), தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலம் 3-ம் இடத்தையும் (97.40 சதவீதம்) பிடித்துள்ளன.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு பிப்.15-ம் தேதி தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரை நடந்தது. நாடுமுழுவதும் 21.66 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 20.17 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 93.12 சதவீதம். மாணவிகள் 94.25 சதவீதம் பேரும், மாணவர்கள் 92.27சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 94.40 சதவீதமாக இருந்தது. அது தற்போது 1.28 சதவீதம் குறைந்துள்ளது.
பிளஸ் 2 போலவே, தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்தையும் (99.99 சதவீதம்), பெங்களூரு மண்டலம் 2-ம்இடத்தையும், (99.18 சதவீதம்), சென்னை மண்டலம் 3-ம் இடத்தையும் (99.14 சதவீதம்) பிடித்துள்ளன.
மாணவ, மாணவிகள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை ‘டிஜிலாக்கர்’ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அச்சிடப்பட்ட மதிப்பெண் மற்றும் தேர்ச்சி சான்றிதழ், பள்ளிகள் வழியாகவும் வழங்கப்படும். உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மெரிட் சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஜுலையில் துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT