Published : 12 May 2023 07:11 AM
Last Updated : 12 May 2023 07:11 AM
சென்னை: நாட்டிலேயே முதல்முறையாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் 4 ஆண்டு புதிய பட்டப் படிப்பு, சென்னை ஐஐடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பில் இந்த ஆண்டே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
சென்னை ஐஐடியில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு துறைகள்இயங்கி வருகின்றன. இந்நிலையில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத் துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அதன் இயக்குநர் வீ.காமகோடி, காக்னிசன்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலையில் புதிய துறைதொடங்கப்பட்டது.
இத்துறை, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தில் பிஎஸ் என்ற 4 ஆண்டு பட்டப் படிப்பை வழங்கும். மருத்துவத்துடன் தொழில்நுட்பத்தை இணைத்து புதிய பட்டப் படிப்பு தொடங்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பேசிய லட்சுமிநாராயணன், ‘‘மருத்துவம் மற்றும்தொழில்நுட்பம் இடையேயான கூட்டு ஆராய்ச்சி, மருத்துவத்துறையில் இந்தியாவை முன்னணி நாடாகமாற்றும். விண்வெளி, அணுசக்தி, டிஜிட்டல், உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நமது வளர்ச்சியை நிரூபித்துள்ளோம். அத்தகைய வளர்ச்சியை மருத்துவம், தொழில்நுட்ப கூட்டுத் துறையிலும் நிரூபிக்க இந்த புதிய துறை அடித்தளமாக அமையும்’’ என்றார்.
ஐஐடி இயக்குநர் வீ.காமகோடிபேசும்போது, ‘‘மருத்துவத்துறையும் தொழில்நுட்பத்துறையும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை கரோனா சூழல்வெளிப்படுத்தியது. எதிர்காலத்தில் இதுபோன்ற எதிர்பாரா சூழல்நேரிட்டால் அதை எதிர்கொள்ள மருத்துவ, தொழில்நுட்ப கூட்டு ஆராய்ச்சி பெரிதும் உதவும்.
மருத்துவத் துறையில் ஏற்படு்ம் சவால்களை எதிர்கொள்ள மருத்துவர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் இணைந்து செயல்படச் செய்வதுதான் ஐஐடியின் இலக்கு ஆகும்.மருத்துவ சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது, சுகாதாரத்துறையில் புரட்சியை ஏற்படுத்துவது என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறோம்’’ என்றார்.
புதிய படிப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.கிருஷ்ணகுமார் பேசும்போது, ‘‘பிஎஸ் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புக்கு மாணவர்கள் இந்திய அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (IISER) நடத்தும் நுழைவுத் தேர்வு (IAT) மூலம் சேர்க்கப்படுவர்.
கடந்த ஆண்டு அல்லது இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்கள் (அறிவியல் பாடங்கள் படித்தவர்கள்) இந்த புதிய படிப்பில் சேரலாம். கூடுதல் விவரங்களை https://mst.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்’’ என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment