Published : 09 May 2023 07:00 AM
Last Updated : 09 May 2023 07:00 AM
விருதுநகர்: பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற மாணவர்கள், ஆசிரியர்களின் கூட்டு முயற்சியே காரணம் என்று முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 10,465 மாணவர்கள், 11,843 மாணவிகள் என மொத்தம் 22,308 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 10,135 மாணவர்கள், 11,693 மாணவிகள் என மொத்தம் 21,828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 480 பேர் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி சதவீதம் மாணவர்கள்- 96.85, மாணவிகள்- 98.73. ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.85.
தேர்ச்சி விகிதத்தில் இம்மாவட்டம் 1985 முதல் 2013 வரையிலும், 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் முதலிடம் பெற்றது. கடந்த ஆண்டு மாநில அளவில் 2-ம் இடம் பெற்ற நிலையில், இந்த ஆண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக புதிதாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட ராமர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி தற்போது பணியிட மாறுதல் பெற்றுள்ள ஞானகவுரி ஆகியோர் கூறியதாவது: மாணவர்களின் கடும் உழைப்பு மற்றும் ஆசிரியர்களின் தொடர் முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம். பள்ளிகளில் மெதுவாக கற்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன.
கடந்த ஆண்டு மாநில அளவில் 2-ம் இடம் பெற்றபோது, அடுத்த ஆண்டில் நிச்சயம் முதலிடம் பெறுவோம் என்று அனைத்து பள்ளி ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு செயல்பட்டனர். அனைவரின் கூட்டு முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT