Last Updated : 26 Sep, 2017 11:33 AM

 

Published : 26 Sep 2017 11:33 AM
Last Updated : 26 Sep 2017 11:33 AM

பொறியியல் என்னும் பொறி: மீட்சிக்கான முயற்சிகள் பலன் தருமா?

ந்தியாவில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை 2018-ம் ஆண்டில் மூட முடிவுசெய்துள்ளது, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கவுன்சில். பொறியியல் கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளில் 7 சதவீதத்தினர் மட்டுமே முழுமையான பணித்திறன் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. ஆனால், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாட்டின் பொருளாதார, தொழில்துறை, சமூக வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பொறியியல் கல்வித்துறை சரிவு கண்டது எப்படி? இழந்த பொலிவை மீண்டும் பொறியியல் கல்லூரிகள் பெறுமா?

170 ஆண்டு பாரம்பரியம்

நடைமுறையில் இந்தியாவில் உள்ள பொறியியல் கல்வி முறை பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் தொடங்கப்பட்டது. 1847-ல் உத்தரப்பிரதேசம் ரூர்க்கியில் தாம்சன் கட்டுமானப் பொறியாளர் பயிற்சிக் கூடம் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐ.ஐ.டி.-ரூர்க்கியான இதுவே நாட்டின் முதல் பொறியியல் கல்லூரியாக அறியப்படுகிறது. அதை அடுத்து, கல்கத்தா சிவில் பொறியியல் கல்லூரி (1856), பூனா பொறியியல் கல்லூரி (1858) ஆகியவை திறக்கப்பட்டன.

இந்த வரிசையில் சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஐரோப்பாவுக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம் இதுவே. 1794-ல் நில அளவைப் பள்ளியாகத் தொடங்கப்பட்ட இது 1858-ல் கட்டிடப் பொறியியல் பள்ளியாக மாற்றப்பட்டது.

ஆக, இந்தியாவின் நவீன பொறியியல் கல்வி. 170 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது தேச வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க அதிக அளவிலான பொறியாளர்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்தில் தனியாருக்குத் திறந்துவிட்ட சில ஆண்டுகளில் பொறியியல் கல்வியின் போக்கு மாறியது. புற்றீசலாய்த் தனியார் பொறியியல் கல்லூரிகள் பெருகியதும், பொறியியல் உயர் கல்வி அதன் தனித்துவத்தை இழந்தது.

பொறியில் சிக்கும் மாணவர்கள்

பள்ளிபடிப்பின்போதே பெரும்பான்மையானவர்களின் உயர் கல்வி இலக்காகப் பொறியியல் கல்வி திணிக்கப்படுகிறது. மாணவரின் விருப்பத்தை அறியாது பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமென சுயநிதிக் கல்லூரிகளில் பெற்றோர் சேர்த்துவிடுகின்றனர். அத்தகைய சுயநிதிக் கல்லூரிகளில் தரமான ஆசிரியர்கள், ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளதா எனச் சரிபார்ப்பதும் இல்லை. கல்லூரி முகப்பின் பிரம்மாண்டம், வசிப்பிடத்துக்கு அருகிலிருப்பது, இடைத்தரகர்கள், கல்லூரி நிர்வாகத்தின் கவர்ச்சியான வாக்குறுதிகள் போன்றவற்றில் ஏமாந்து தங்கள் பிள்ளைகளைத் தள்ளிவிடுகின்றனர். இதன் விளைவு, முதலாமாண்டில் தேர்வெழுதும் இந்தியப் பொறியியல் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தோல்வியடைவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுத் தெரிவிக்கிறது. போதிய கல்வித் தகுதியோ பயிற்றுவிக்கும் திறனோ அற்ற ஆசிரியர்கள், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், வளாகத் தேர்வு நாடகங்கள், வரம்பு மீறும் கட்டணங்கள் ஆகியவையும் பொறியில் சிக்கிய எலியாகப் பொறியியல் மாணவர்களைத் தவிக்கவிடுகின்றன.

பணித்திறன் இல்லாத பட்டதாரிகள்

டெல்லியைச் சேர்ந்த ‘அஸ்பயரிங் மைண்ட்ஸ்’ என்கிற வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு நிறுவனம் கடந்தாண்டு நாடு முழுவதும் வேலைதேடும் பொறியியல் பட்டதாரிகளை மையப்படுத்தி ஒரு ஆய்வை மேற்கொண்டது. 2013-ம் ஆண்டு பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரிகளில் 1.5 லட்சம் பேரிடம் ஆய்வுக்கான தரவுகளைச் சேகரித்தது. இதில் 97 சதவீதப் பொறியியல் பட்டதாரிகளின் பணித்தேர்வு ஐ.டி. அல்லது பாரம்பரியப் பொறியியல் துறைகள் சார்ந்தே இருந்தன. ஆனால், அவர்களின் பணித்திறனைச் சோதித்தபோது 3 சதவீதத்தினர் மட்டுமே ஐ.டி. துறைக்கான தகுதியையும், 7 சதவீதத்தினர் மட்டுமே பாரம்பரியப் பொறியியல் துறைக்கான தகுதியையும் பெற்றிருந்தனர். பொறியியல் பட்டதாரிகள் வேலையின்றி அலைவதும், படித்த படிப்புக்குத் தொடர்பில்லாத வேலைகளில் அமர்வதும் இந்தப் பணித்திறன் பற்றாக்குறையாலேயே. ஆனால், இந்தியாவிலிருக்கும் 10,363 பொறியியல் கல்லூரிகளில் கிட்டத்தட்ட 29 லட்சம் பேர் ஆண்டுதோறும் சேர்கிறார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் படிப்பை வெற்றிகரமாக முடித்து வேலைவாய்ப்பு சந்தைக்குள் நுழைகிறார்கள்.

காற்று வாங்கும் கல்லூரிகள்

2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வில் 527 கல்லூரிகள் பங்கேற்றன. அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கைக்கான 2.23 லட்சம் இடங்களில் 1.57 லட்சம் இடங்கள் மட்டுமே பூர்த்தியடைந்தன. 148 கல்லூரிகள் 20 சதவீதத்துக்கும் குறைவான சேர்க்கையைப் பெற்றன. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கல்வி வர்த்தகத்தில் இறங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் போதிய சேர்க்கை இல்லாதபோது அதிலிருந்து விலக விரும்புகின்றன. தேசத்துக்குக் கிட்டத்தட்ட 25 சதவீதம் பொறியாளர்களை ஆண்டுதோறும் வழங்கிவந்த தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் பல மூடுவிழா காண்கின்றன. ‘தமிழ்நாட்டு பொறியியல் கல்லூரி விற்பனைக்கு’ என்ற விளம்பரத்தை இணையதளங்களில் பார்க்கலாம். நடப்பாண்டில் 11 தமிழகப் பொறியியல் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பிலான ஆய்வில் அடிப்படைத் தகுதிகள்கூட இல்லாத 44 கல்லூரிகளின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

என்ன ஆச்சு பொறியியல் படிப்புக்கு?

பொறியியல் உயர் கல்வியின் சரிவுகளை உற்றுக் கவனிக்கும் கல்வியாளர்கள் பல ஆண்டுகளாகவே மாற்றம் கோரி மத்திய அரசை வலியுறுத்திவந்தனர். ஒரு வழியாக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதன்படி பொறியியல் கல்லூரிகளுக்கான பாடத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக மீளாய்வு செய்து மேம்படுத்தும் பணியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மும்முரமாக உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கு நாடு முழுமைக்குமான பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் தரமான பட்டதாரிகளை உருவாக்கவும், அதன்மூலம் 40 முதல் 60 சதவீதம் வரை பொறியாளர்களின் வேலைவாய்ப்பு திறன் உயரும் என்றொரு கணக்கை முன்வைக்கிறார்கள். இவற்றுடன் அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு இரண்டையும் இணைத்து ஒற்றை அதிகார அமைப்பாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உயர் கல்விக்குப் புத்துயிரூட்ட உத்தேசித்துள்ளனர்.

இத்தகைய திட்டங்கள் பொறியியல் கல்வியின் சரியும் செல்வாக்கை மீட்டுத் தருமா, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் பொறியியல் கல்வித் துறைக்கு வேறென்ன மாற்றங்கள் ஏற்றம் தரும், மருத்துவப் படிப்பைப் போன்றே பொறியியலுக்கான ஒற்றை நுழைவுத் தேர்வும் தமிழக மாணவர்களைத் தத்தளிக்கச் செய்யுமா, பொறியியல் கல்வியில் நாட்டம் கொண்ட பெற்றோரும் மாணவரும் தெளிவு பெறுவது எப்படி? போன்ற அச்சுறுத்தும் பல கேள்விகள் இன்று நம் முன்னே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x