Published : 08 May 2023 10:29 PM
Last Updated : 08 May 2023 10:29 PM

‘நீட்’ தேர்வு விளம்பரதாரர் இணைப்பு.. ஒரு விளக்கம்

மாணவ, மாணவியர் உயர்வுக்கு நம்பிக்கை தருவதே எமது பணி!

நாடெங்கிலும் கடந்த ஞாயிறன்று (7.5.2023) நடந்த ‘நீட்’ மருத்துவ நுழைவுத் தேர்வில் பல லட்சம் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.

மருத்துவராகும் கனவுடன் தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஒரு நல்ல நேர்மறையான வழிகாட்டியாக இருக்கும் விதமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் விளம்பரதாரர் ஒருவர் அளித்த இணைப்பு, தமிழகம் முழுவதும் ‘நீட்’ தேர்வு மையங்களுக்கு வெளியே விநியோகிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்து வருவதால், எல்லா மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என்பது யதார்த்தம்.

அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அப்பாற்பட்டு எவ்வாறு, எங்கெல்லாம் மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களுடன் அந்த இணைப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தங்களுக்கான வாய்ப்பு கொட்டிக் கிடப்பதை மாணவ, மாணவிகள் உணர்ந்து கொள்ளத்தக்க நோக்கிலேயே அவர்களின் எதிர்காலம் கருதி அந்த இணைப்பு விநியோகிக்கப்பட்டது.

மதுரையில் ஒரே ஒரு கல்லூரியில் மட்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. இணைப்பின் முதல் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ‘எட்டாக்கனியாகும் மருத்துவப் படிப்பு’ என்ற தலைப்பை உள்வாங்கிக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியிருக்கிறார் ஒரு மாணவரின் அப்பா. அங்கிருந்த மற்ற பெற்றோரையும் தனது கருத்துக்கு ஆதரவாக சேர்க்க முயன்றார். இணைப்பை விநியோகித்துக் கொண்டிருந்த ‘இந்து தமிழ் திசை’ ஊழியரிடமும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

தங்கள் பிள்ளைகளை உற்சாகமிழக்கச் செய்யும் வகையிலும், தற்கொலை எண்ணத்தை தூண்டும் வகையிலும் இந்த இணைப்பு இருப்பதாகக் கூறி ஆவேசமானார். நமது ஊழியரை பிடித்து தள்ளி, நாளிதழ்களை அள்ளிச் சென்று சிலரின் உதவியோடு தீயிட்டுக் கொளுத்தி விட்டார்.

ஏதோ ஒரு பதற்றத்தில், இணைப்பிதழ் பற்றிய தவறான புரிதலோடு இருந்த தந்தையின் எந்த செயலுக்கும், தன்னை நிலைகுலைய செய்த அந்த நேரத்திலும் எதிர்ப்பு தெரிவிக்க நமது ஊழியர் முற்படவில்லை. காரணம் அந்த தந்தையின் செயலுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்பது நன்றாகவே புரிந்ததால்தான்!

ஆனால், இந்த சம்பவத்தை கையில் எடுத்துக் கொண்டு விஷமிகள் சிலர், சமூக ஊடகங்களில் பரபரப்பான ஒரு பரப்புதல் வேலையில் இறங்கிவிட்டனர். அதுவே நமக்கு வருத்தம் தருவதாக அமைந்து விட்டது.

‘நீட்’ தேர்வு தொடர்பாக, தமிழகத்தில் நடந்துவரும் விவாதங்களையும் அதன் பின்புலத்தில் உள்ள அரசியலையும் தொடர்ந்து நடுநிலையோடு விமர்சித்து வருகிறது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். அதே சமயம் ‘நீட்’ தேர்வில் வாய்ப்பை இழந்த காரணத்துக்காக அச்சப்பட்டு தற்கொலை முடிவை நாடும் எண்ணத்தை அறவே மாணவ, மாணவிகள் விட்டொழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அதற்கென்றே தன்னம்பிக்கை கட்டுரைகளை தொடர்ந்து பிரசுரித்தும் வந்திருக்கிறது.

சொல்லப்போனால், தற்கொலைதான் தீர்வு என்ற தவறான முடிவை நாடிய பரிதாபத்துக்குரிய மாணவி அனிதாவின் பெயரை அரியலூர் அரசு மருத்துவமனையின் ஓர் அரங்கத்துக்கு சூட்டியபோது, ‘இது மிகத் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்’ என்று எச்சரித்து தலையங்கம் எழுதியதும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்தான். தற்கொலையை ஒரு தியாகம்போல சித்தரிப்பதை நமது நாளிதழ் தொடர்ந்து கண்டித்து வருகிறது.

அப்படியிருக்க, மாணவி அனிதாவின் புகைப்படத்தையும் இணைப்பில் வெளியிட்டு மாணவ மாணவிகளை அச்சப்படுத்தியதாக முற்றிலும் பொய்யான ஒரு தகவலை சிலர் பகிர்ந்து கொள்வது அதிர்ச்சிக்குரிய விஷயம். ‘நீட்’ தேர்வை எதிர்ப்போர் - ஆதரிப்போர் என்ற இரு வேறு ‘அரசியல்’ அணியினருக்கு இடையே நடக்கும் மோதலுக்குள் ‘இந்து தமிழ் திசை’யை முற்றிலும் தவறாகத் தொடர்புபடுத்தி, ஒரு மாணவரின் தந்தை ஏதோவொரு பதற்றத்தில் வெளிப்படுத்திய கோபத்தை ஊதிப் பெரிதாக்க நினைக்கும் சிலரின் உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான எண்ணத்தை என்னவென்று சொல்வது!

இன்று சமூக ஊடகங்களின் மூலம் பரவி வரும் நச்சுத் தகவல்களையும், காட்சிகளையும், அதன் பின்னணி தெரியாமல் அவசரப்பட்டு அப்படியே நம்பி, எப்படியெல்லாம் அப்பாவிகள் ஏமாறுகிறார்கள் என்பதற்கு இது இன்னுமொரு சாட்சி.

‘இந்து தமிழ் திசை’யின் நடுநிலை, ஆழமான அறிவைப் புகட்டும் கட்டுரைகள் காரணமாக அது வாசகர்கள் மத்தியில் - குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் ஏற்படுத்தி வரும் அபாரமான தாக்கத்தை இதுபோன்ற பொய்ச் செய்தி பரப்பும் விஷமிகளால் தடுத்துவிட முடியாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ‘இந்து தமிழ் திசை’யின் நேர்மறையான அணுகுமுறைக்காகவே அதை ஆர்வத்தோடு படித்துவரும் வாசகர்களின் பலம் எங்களுக்கு நாளுக்கு நாள் பெருகி வருவதே இதற்கு சாட்சி.

‘நீட்’ தேர்வு மட்டுமல்ல.. எந்தவொரு தேர்வுக்குமே கடுமையாக உழைத்து தங்களை தயார்படுத்திக் கொள்ளும் மாணவ மாணவியர், எல்லாவிதமான உயர்வுகளையும் பெற்று உற்சாகமாக வாழ்வதற்கு தேவையான அறிவையும், நம்பிக்கையையும் எப்போதும்போல் தொடர்ந்து அளித்து வருவோம். அதுவே எங்களின் முக்கியப் பணியாக இருக்கும்.
வாசகர்களின் ஆதரவுடன் என்றென்றும்..

தேர்வுகளில் மட்டுமல்ல... எல்லா சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு உற்சாகத்துடன் உயர்வு பெற மாணவ, மாணவிகளை வாழ்த்துகிறோம்.

ஆசிரியர்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x