Published : 08 May 2023 04:57 PM
Last Updated : 08 May 2023 04:57 PM
சென்னை: ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் சார்பில், இளம் இந்திய விஞ்ஞானி-2023-க்கான இறுதிப்போட்டி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டன.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: இளைய சமூகத்தினரிடம் அறிவியல் சார்ந்த கல்வியின் முக்கியத்துவத்தை பரப்பும் வகையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு ஒவ்வொரு ஆண்டும், இளம் விஞ்ஞானிகள் தேர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான இந்திய இளம் விஞ்ஞானி விருதுக்கான போட்டிக்கு, நாடு முழுவதும் உளள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 3000 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
இதில் 360 பேர் ஆன்லைன் மூலம் தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். அதிலிருந்து 102 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் படைப்புகள், மே 3 மற்றும் 4ம் தேதிகளில் சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இறுதிப்போட்டியில் பங்கேற்றிருந்த 22 மாணவர்கள் தங்களது படைப்புகள் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தனர். மேலும், அவர்களிடம் ஊக்கத்தொகையாக கிடைக்கும் ரூ.50 ஆயிரத்தைக் கொண்டு என்ன செய்வீர்கள்? உங்களது லட்சியத்தை நோக்கி பயணத்துக்கு பெற்றோர்களை எப்படி ஒத்துக்கொள்ள வைப்பீர்கள்? என்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.
இறுதிப்போட்டியில் பங்கேற்று சிறப்பாக பதிலளித்த மாணவர்களில் இருந்து தலா 3 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.30.000, மூன்றாம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர, 16 பேருக்கு ஆறுதல் பரிசும், நடுவர் சிறப்பு பரிசுகள் 5 பேருக்கும் வழங்கப்பட்டன. அரசு பள்ளிகளுக்கான பிரிவில், மகராஷ்டிரா மற்றும் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும், தனியார் பள்ளிகளுக்கான பிரிவில், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் பரிசுகளைப் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மேஜர் ஜெனரல் எம்.இந்திரபாலன், ரஷ்ய துணை தூதர் ஜென்னடி ரோகலே, ஹெக்ஸாவேர் துணைத் தலைவர் சரவணன் விஸ்வநாதன், கல்வி உளவியலாளர் சரண்யா ஜெயக்குமார், தமிழ்நாடு உருது அகாடமியின் துணைத் தலைவர் நயிமூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT