Published : 08 May 2023 06:35 AM
Last Updated : 08 May 2023 06:35 AM

நீட் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு: வினாத்தாள் சற்று கடினம் என கருத்து

சென்னை அருகே படப்பை மையத்தில் தேர்வெழுத வந்த 67 வயது அசோக்குமார்.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வுநேற்று நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். வினாத்தாள் சற்றுகடினமாக இருந்ததாக மாண வர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் பயிலவும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல, ராணுவ நர்சிங்கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வுநாடு முழுவதும் 490 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நேற்று பிற்பகல் 2 முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்றது.

தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 200 தேர்வு மையங்களில், ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். சென்னையில் 28 மையங்களில், 20 ஆயிரம்பேர் தேர்வெழுதினர். மணிப்பூரில்நடைபெற்றுவரும் கலவரம் காரணமாக, அந்த மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் பங்கேற்பதற்காக சென்னை படப்பையில் உள்ள ஆல்வின் பள்ளி தேர்வு
மையத்தில் நேற்று காத்திருந்த மாணவிகள். படம்: எம்.முத்துகேணஷ்

கடும் சோதனைக்குப் பின்னரே... தேர்வெழுத வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் கடும்சோதனைகளுக்குப் பின்னரே, தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காதணி, கொலுசு, நகை உள்ளிட்டவை அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்கள் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, 1.30 மணிக்குப் பின்பு தேர்வெழுத வந்தவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்துக்கு தேர்வெழுத வந்த மாணவிஒருவர், திடீரென உடல்நலக்குறைவால் மயக்கம் அடைந்தார். அங்கிருந்த தேர்வு கண்காணிப்பு அலுவலர்கள், அவருக்கு தண்ணீர் தந்து, அமர வைத்தனர். பின்னர், அருகே உள்ள மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவர்கள், மாணவிக்கு சிகிச்சை அளித்தனர். சிறிது நேர ஒய்வுக்குப் பிறகு, அந்த மாணவி தேர்வெழுதினார்.

சென்னை ஆயிரம் விளக்கு ஆசான் நினைவு சீனியர் செகன்டரி பள்ளிக்கு வெளியே காத்திருந்த
மாணவ, மாணவிகள். படம்: பு.க.பிரவீன்

மொழிபெயர்ப்பில் பிழைகள்: இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் கேட்டபோது, ‘‘உயிரியல், வேதியியல் பிரிவுகேள்விகள் எளிதாக கேட்கப்பட்டிருந்தன.

இயற்பியல் பிரிவில் மட்டும் பல்வேறு வினாக்கள் கணித அடிப்படையில் இருந்ததால், கடினமாக இருந்தது. வழக்கம்போல, தமிழ் மொழிப்பெயர்ப்பில் சில இடங்களில்பிழைகள் காணப்பட்டன. முதல்முறை பங்கேற்பவர்களைவிட 2, 3-ம் முறை தேர்வு எழுதுபவர்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்திருக்கும்’’ என்றனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகளை துரிதமாக முடித்து தேர்வுமுடிவுகளை இன்னும் 2 வாரங்களில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக என்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x