Published : 07 May 2023 04:38 AM
Last Updated : 07 May 2023 04:38 AM

நாடு முழுவதும் இன்று மதியம் நீட் தேர்வு: 490 நகரங்களில் 20.87 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று மதியம் நடைபெறுகிறது. தமிழகத்தில் 1.47 லட்சம் பேர் உட்பட நாடு முழுவதும் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்­கின்றனர்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 490-க்கும் மேற்பட்ட நகரங்களில் இன்று (மே 7) மதியம் 2 மணிமுதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடக்கிறது.

இத்தேர்வுக்கு 11.84 லட்சம் மாணவிகள், 9.03 லட்சம் மாணவர்கள், 13 திருநங்கைகள் என மொத்தம் 20.87 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 2.15 லட்சம் அதிகம். தமிழகத்தில் 95,823 மாணவிகள், 51,757 மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 1 லட்சத்து 47,581 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரம்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் 720 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும்.

தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பிறகு வருபவர்களுக்கு அனுமதி தரப்படாது. ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும்.

வெளிப்படையாக தெரியும் தண்ணீர் பாட்டிலை தேர்வர்கள் கொண்டுவரலாம். ஆனால், செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டுவர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக் கூடாது.இதுபோன்ற கட்டுப்பாடுகள், இதர வழிமுறைகளை மாணவ, மாணவிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கூடுதல் விவரங்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x