Last Updated : 06 May, 2023 03:23 PM

 

Published : 06 May 2023 03:23 PM
Last Updated : 06 May 2023 03:23 PM

விருதுநகரில் பள்ளி வாகன தரம், பாதுகாப்பு அம்ச ஆய்வில் 80 வாகனங்கள் நிராகரிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இன்று ஆய்வு செய்தனர். இதில், 80 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டன.

ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்கள் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு) சிறப்பு விதி 2012-ன்படி பாதுகாப்பானதாகவும், சிறந்த முறையில் இயக்கக் கூடிய நிலையில் பள்ளி வாகனங்கள் உள்ளதா என மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு தலைவர்களால் கூட்டாய்வு செய்யப்பட வேண்டும்.

அதன்படி, விருதுநகர் பகுதியில் உள்ள 44 பள்ளிகளைச் சார்ந்த 215 வாகனங்கள், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள 37 பள்ளிகளைச் சார்ந்த 171 வாகனங்கள், சிவகாசி பகுதியில் உள்ள 29 பள்ளிகளைச் சார்ந்த 134 வாகனங்கள், ஸ்ரீவில்லிபுத்துார் பகுதியில் உள்ள 65 பள்ளிகளைச் சார்ந்த 254 வாகனங்கள் என மொத்தம் 135 பள்ளிகளைச் சார்ந்த 774 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பள்ளி பேருந்துகள் ஆய்வு செய்யும் பணி விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஆய்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கிவைத்து, பள்ளி பேருந்துகளின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். 774 பள்ளி வாகனங்களில் 694 வாகனங்கள் முழு தகுதியடையதாக இருந்தன. 80 வாகனங்களில் சிறு சிறு குறைகள் உள்ள காரணத்தினால், நிராகரிக்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தில் தீ விபத்து ஏற்படும்போது செய்யவேண்டிய மீட்புப் பணிகள் குறித்து தீயணைப்புத்துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகளுக்கு ஆபத்து காலங்களில் செய்யப்படும் முதலுதவி குறித்து 108 அவசர ஊர்தி அலுவலர்கள் செயல் விளக்கம் அளித்தனர்.

அதோடு, பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மதுரை வாசன் கண் மருத்துவமனை குழுவினரால் இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விருதுநகர் சரக துணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், விருதுநகர், சிவகாசி மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கே.பாஸ்கரன் (விருதுநகர்), இளங்கோ (ஸ்ரீவில்லிபுத்தூர்) குமரவேல் (சிவகாசி) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x