Published : 05 Sep 2017 10:54 AM
Last Updated : 05 Sep 2017 10:54 AM
இ
ன்று ஆன்லைன் வழியாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பலர் உதிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் பயிற்சியாளர் பிரதாப் தேர்ந்தெடுத்த துறையை மற்றும் அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது சந்தேகமே. ஆந்திர மாநிலத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி மையம் வைத்து நடத்துகிறார் பிரதாப். வாட்ஸ் அப் மூலமாகவே அவர் ஸ்கேடிங் பயிற்சி அளித்த தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் லோகித் ஆதித்யா ஸ்கேட்டிங்கில் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் பயிற்சி
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கோமங்கலத்தைச் சேர்ந்த ஆர்.ஜெயபிரகாஷ்- ஜெ.வசந்தி தம்பதியினர். இவர்களது மகன் லோகித் ஆதித்யா (10). தற்போது அமராவதி சைனிக் பள்ளியில் சேர்வதற்காகத் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று வருகிறார். மகனுக்கு ஸ்கேட்டிங் மீது இருந்த ஆர்வத்தைப் புரிந்து கொண்டபோது, ஒரு வார இதழ் மூலம் ஆந்திர மாநிலம், புத்தூரை சேர்ந்த ஒரு பயிற்சியாளரின் தொடர்பு கிடைத்தது என்கிறார் ஜெயபிரகாஷ்.
“சமூக அக்கறையுடன் மாணவர்களின் திறமை அறிந்து ஊக்குவிக்கும் அவரிடம் என் மகனுக்கும் பயிற்சி தர வேண்டினேன். என் மகன் ஒருவனுக்காக 600 கி.மீ., தொலைவு பயணம் செய்து பயிற்சி தருவது அவருக்கு இயலாது என்பதை அறிந்து நாங்களே அவரை நோக்கி ஆந்திரா சென்றோம். அங்கு 7 நாட்கள் அவரது வீட்டிலேயே நாங்கள் தங்க இடம் கொடுத்து, 3 வேளை உணவும் கொடுத்து, மகனுக்குப் பயிற்சியும் கொடுத்து ஊக்கப்படுத்தினார். பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பினோம். வாட்ஸ் அப் மூலம் அவர் அளித்த பயிற்சியால் எனது மகன் சாதித்தான்” என்கிறார் ஜெயபிரகாஷ்.
வருமானத்தில் ஒரு பங்கு
தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பின்தங்கிய நிலையிலிருக்கும் குழந்தைகளுக்கும் உதவி வருகிறார் பிரதாப். “என்னுடைய பூர்வீகம் தமிழகம்தான். திருத்தணியைச் சேர்ந்தவர் என்னுடைய தந்தை. அவர் தனது சிறு வயதிலேயே பிழைப்புக்காக ஆந்திரா சென்று அங்கேயே குடியேறினார். நான் கோலாரில் பிறந்தேன். என் மனைவி அங்கன்வாடி பள்ளி ஆசிரியை. சிறுவயதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக யாருடைய பயிற்சியும் இன்றி நானாகவே ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டேன். ஒரு முறை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த என்னைக் கண்ட ஆந்திர விளையாட்டு துறை அமைச்சர் என்னைப் பாராட்டியதோடு, பயிற்றுநராகும் வாய்ப்பையும் அளித்தார்” என்கிறார் பிரதாப்.
இவ்வாறு ஸ்கேட்டிங் பயிற்சியாளராக மாறியவர், கடந்த 28 ஆண்டுகளாக 250-க்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி அளித்து இருக்கிறார். தற்போது அவரிடம் 30-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர் வசிக்கும் பகுதியில் உள்ள நலிந்த மக்களின் குழந்தைகளுக்கும், பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கும் இலவசமாகவே பயிற்சி அளித்துவருகிறார்.
இதைத் தவிரவும் பெரும்பாலும் அரசு பள்ளி குழந்தைகளுக்குத்தான் பயிற்சி அளிக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை அங்கன்வாடி பள்ளிகளுக்குத் தேவையான பொருட்களை இலவசமாக அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
பெருமைக் கொள்ளும் தருணம்
தமிழகத்தில் இருந்தும் பயிற்சிக்காகப் பலர் இவரைத் தேடி வருகின்றனர். “என்னிடம் பயிற்சி பெற வரும் தமிழர்களிடம் நான் கட்டணம் பெறுவதில்லை. எங்கள் ஊரில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கு உதவும்படி வேண்டுகிறேன். இதன் மூலம் பள்ளியின் சுவர் முழுவதும் ஓவியங்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன்கள், எல்.இ.டி. டிவி மூலம் ஸ்கேட்டிங் பயிற்சி, ஆங்கில மொழிப்பயிற்சி எனக் குழந்தைகள் உற்சாகமாகப் பயில்கின்றனர். 20 குழந்தைகள் மட்டுமே பயின்ற இப்பள்ளியில் தற்போது 85 பேர் பயன்பெறுகிறார்கள்” என்கிறார்.
பிரதாபின் முயற்சியால் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித் தரம் அப்பகுதி குழந்தைகளுக்குக் கிடைத்துள்ளது. மாநில நிர்வாகம் இப்பள்ளியை ஆய்வு செய்து பாராட்டி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அங்கன்வாடிப் பள்ளிகளையும் இதே போல மாடல் பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது தனக்கும் தன்னுடைய மனைவிக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது, வாழ்க்கையில் இது பெரும் சாதனையாகக் கருதுவதாக பிரதாப் தெரிவிக்கிறார்.
“இன்றைய சூழலில் கல்வியைப் போல விளையாட்டும் வணிகமயமாகி வருவது வேதனையளிக்கிறது. சாதிக்க வேண்டும் என விரும்பிய மாணவன் லோகித் ஆதித்யாவுக்கு சில நாட்களே நேரடிப் பயிற்சி கொடுத்தேன். பின் ‘ஏகலைவன்’ போல நேரடி பயிற்சி இன்றியே திறமையை வளர்த்துக் கொண்டான். கடந்த மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. ‘ஸ்பீட்’, ‘கேத்லான்’, ‘ரிலே’ என 3 பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் லோகித் ‘ரிலே’ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளான்.
வரும் அக்டோபர் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டியிலும் அவன் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதே போல வாய்ப்பு மறுக்கப்பட்ட சூழலில் இருக்கும் பல மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள்” என்கிறார் இந்த தன்னலமற்றப் பயிற்சியாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT