Published : 25 Apr 2023 04:42 PM
Last Updated : 25 Apr 2023 04:42 PM

தமிழ், ஆங்கிலம் பாடங்களில் முதலிடம் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம்: கும்பகோணம் எம்எல்ஏ

கும்பகோணம்: ரூ.10 லட்சம் சொந்த நிதியில் அறக்கட்டளை நிறுவி தமிழ், ஆங்கிலம் பாடங்களில் முதலிடம் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் அறக்கட்டளை நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் நா.தனராஜன் தலைமை வகித்து கூறியது: “இக்கல்லூரியிலுள்ள 14 அறக்கட்டளை நிதியிலிருந்து கிடைந்த ரூ.5,50,359 வட்டி தொகையிலிருந்து, இங்கு படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி விழாவாக நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

மேலும், இக்கல்லூரியில் பல அறக்கட்டளைகள் இருந்தாலும், திராவிட இயக்கத்தலைவர்களின் பெயர்களில் ஒரு அறக்கட்டளை கூட இல்லாததால், கும்பகோணம் எல்எல்ஏ, ஒரு அறக்கட்டளை நிறுவி தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க ஆவண செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் 2020-21-ம் கல்வியாண்டில் பயின்ற 195 மாணவ-மாணவிகளுக்கு காசோலையை வழங்கி பேசும்போது, “தமிழ்நாட்டைச் சேர்ந்த பல கல்வி வள்ளல்கள், ஏழை எளிய மாணவர்கள், கல்வி பயில அறக்கட்டளைகளையும், கல்வி நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளார்கள், இக்கல்லூரியில் எனது சொந்த நிதியில் ரூ.10 லட்சத்தில் ஒரு அறக்கட்டளை நிறுவி, உயர்கல்வி பயிலும் மாணவர்களில் தமிழ் மற்றும் ஆங்கில ஆகிய 2 பாடங்களில் முதலிடம் பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, இந்தியப் பண்பாட்டுத்துறைத் தலைவர் சீ.தங்கராசு வரவேற்றார். ஆங்கிலத்துறைத் தலைவர் சா.சரவணன் அறிமுகவுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் புவியியல் துறைத்தலைவர் கோபு, புள்ளியியல் துறைத்தலைவர் சீ.பொய்யாமொழி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மோகன்ராஜ். தாவரவியல் துறை பேராசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் பெருமாண்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.கே.பாஸ்கர், அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் அருள்நாயகம் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். முடிவில் தமிழ்த்துறைத் தலைவர் செ.காளிமுத்து நன்றி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x