Published : 22 Apr 2023 04:08 AM
Last Updated : 22 Apr 2023 04:08 AM
சென்னை: தமிழகத்தில் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயல் திறனில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கி இருப்பதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 2016-21 காலகட்டத்தில் மாணவர் சேர்க்கை விகிதம் உயர்கல்வியில் 94.2 சதவீதமும், மேல்நிலைக் கல்வியில் 78.6 சதவீதமும் இருந்தது. இது தேசிய விகிதத்தைவிட அதிகம். எனினும், இந்த காலத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முறையே 14.76 சதவீதம், 11.84 சதவீதம் குறைந்திருந்தது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் சேர்க்கை 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.
அதேபோல, மாணவர் தேர்ச்சி விகிதத்திலும் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. 2016-21-ம் ஆண்டுகளில் 528 அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. அதில் 515 பள்ளிகளில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் இல்லை. பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதில் முறையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும் திட்டம் 2018-ல்தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாததால் திட்டம் முழுமை பெறவில்லை. அதன்பிறகு 2021-22-ம் ஆண்டு ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அதில், 5.34 லட்சம் பேர் இடைநின்றவர்களாக கண்டறியப்பட்டனர். அதிலும் 1.89 லட்சம் மாணவர்கள் மட்டுமே மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
அரசுப் பள்ளிகளில் இணை கல்வி செயல்பாடுகளை அமல்படுத்தும் திறன் குறைவாகவே இருந்தது. 11 சதவீத பள்ளிகளில் மட்டுமே என்சிசி இருந்தது. 30 சதவீத பள்ளிகளில் என்எஸ்எஸ் போன்ற இதர கல்வி இணை செயல்பாடுகள் பின்பற்றப்பட்டன. ஒட்டுமொத்தமாக செயல் திறனில் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. எனவே, அரசுப் பள்ளி மேம்பாடு, இடைநிற்றல் தடுப்பு பணிகளில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் 10, 11, 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகளில் சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவர்களில்பெரும்பாலானோர் இடைநின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT