Published : 21 Apr 2023 06:08 AM
Last Updated : 21 Apr 2023 06:08 AM

திருவள்ளுவர் பல்கலை. தேர்வு முடிவில் விநோதம் - மாற்று சான்றிதழ் வாங்கிய மாணவர் தேர்ச்சி

வேலூர்: திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பருவ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான தேர்வு முடிவுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் மதிப்பெண்கள் பூஜ்ஜியமாக இருந்தது.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பலர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த சலசலப்பு அடங்குவதற்குள் கல்லூரியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிச்சென்ற மாணவர் ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிடாத கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மசுருல் உலும் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் படிப்பை படித்து வந்த சதீஷ்குமார் என்ற மாணவர் மூன்றாம் பருவத் தேர்வு முடிந்ததும் கல்லூரியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி சென்றுவிட்டார்.

தற்போது, 5-ம் பருவத் தேர்வு வெளியான தேர்வு முடிவில் கல்லூரியில் இருந்து சென்றுவிட்ட அவர் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல் வந்துள்ளது. இதை பார்த்து கணினி அறிவியல் துறை மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்லூரியில் இருந்து வெளியேறிய மாணவர் கல்லூரிக்கு தேர்வே எழுதவராத மாணவர் எப்படி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் குளறுபடியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இப்படியே செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்’’ என தெரிவித்தனர்.

இது தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரனிடம் கேட்டபோது, ‘‘மாணவர் சதீஷ்குமார் விவகாரத்தில் அவர் அந்த கல்லூரியில் இருந்து வெளியேறி வேறு ஒரு கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதியுடன் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு வேறு தேர்வு எண் கொடுக்க முடியாது. அவர் ஏற்கெனவே 3 பருவ தேர்வுக்கு பயன்படுத்திய எண்ணை மட்டுமே வழங்க முடியும். அதுகுறித்த விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. வந்து பார்த்துக்கொள்ளலாம்.

அதேபோல், பூஜ்ஜிய மதிப்பெண் எல்லாம் பூஜ்ஜியம்தான். அவர்களுக்கு சந்தேகம் இருந்தால் மறு மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். வேறு பேராசிரியரை கொண்டு திருத்தும்போது 10 மதிப்பெண் இடைவெளிக்கு மேல் இருந்தால் மூன்றாவதாக ஒரு பேராசிரியரை கொண்டு விடைத்தாள் திருத்தப்படும்.

அதில், எந்த மதிப்பெண் வருகிறதோ அந்த மதிப்பெண் வழங்கப்படும். இதில், முதலாவது மற்றும் இரண்டாவது பேராசிரியர் தவறு செய்திருந்தால் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்படும். இதுதான் நடைமுறை’’ என தெரிவித்தார்.

ஆனால், தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்க வாய்ப்பே இல்லாத நிலையில் மறு மதிப்பீடு என கூறி கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது. ஒரு வகுப்பறையில் படிக்கும் அனைத்து மாணவர்களும் எப்படி பூஜ்ஜியம் மதிப்பெண் எடுக்க முடியும் என்பதை திருவள்ளுவர் பல்கலைக்கழக கல்வியாளர்கள் விளக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x