Published : 20 Apr 2023 07:10 AM
Last Updated : 20 Apr 2023 07:10 AM

வீடுகளுக்கே சென்று அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை: திருச்சியில் முதன்முறையாக தொடக்கம்

திருச்சி மாநகராட்சி உறையூர் பாண்டமங்கலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சார்பில் நேற்று வீடுகளுக்கேச் சென்று மாணவர் சேர்க்கை நடத்திய கல்வியாளர் எஸ்.சிவகுமார். பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலா லட்சுமி மற்றும் ஆசிரியர்கள்.

திருச்சி/ கரூர்: திருச்சியில் முதன்முறையாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கே சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில், திருச்சி உறையூர் பாண்டமங்கலம் தெற்கு மாநகராட்சி தொடக்கப் பள்ளி சார்பில் மாணவர்களை அவர்களது வீடுகளுக்கேச் சென்று பள்ளியில் சேர்க்கும் திட்டம் புதிய முயற்சியாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட தொடக்க விழாவில், கல்வியாளர் எஸ்.சிவகுமார், பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலாலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் என 18 பேர் கொண்ட குழுவினர் வீடுதோறும் சென்று, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை அளித்து, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில், 20 மாணவ, மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இத்திட்டம் குறித்து கல்வியாளர் எஸ்.சிவகுமார், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: பெரும்பாலான கூலித் தொழிலாளர்களுக்கு போதிய நேரம் கிடைக்காததால், அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க காலதாமதம் ஆகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் வீட்டிலேயே சேர்க்கை திட்டத்தை உருவாக்கினோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இத்திட்டத்தின்படி, ஒரேநாளில் 20 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், ரேஷன் கடை அருகே விளம்பர பதாகை வைக்கவும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் டி.லீலா லட்சுமி கூறியபோது, “அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் 14 வகையான நலத்திட்டங்களை பெற்றோரிடம் எடுத்துக் கூறினோம். பெற்றோர்களும் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்துக் கொண்டனர்” என்றார்.

கரூர் மாவட்டத்தில்... கரூர் கோட்டைமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில், ஆட்சியர் த.பிரபுசங்கர் பிரச்சார வாகனத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்று இனிப்புகள், பாடப் புத்தகங்களை ஆட்சியர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா, முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக் கல்வி) மணிவண்ணன், மண்டலக் குழுத் தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x