Published : 16 Apr 2023 05:48 AM
Last Updated : 16 Apr 2023 05:48 AM
சென்னை: ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணியாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத் துறை, அறநிலையத் துறை, வனத்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டில் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்று நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை செயல்படுத்தும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின்கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அப்பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர ஆசிரியர், தொகுப்பூதிய ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக பணியாளர் விவரங்களை ஏப்.20-க்குள்தாக்கல் செய்ய வேண்டும். பள்ளிகளின் அசையும், அசையா சொத்துகள், கட்டிடங்கள் உள்ளிட்ட விவரங்களையும் தரவேண்டும். மாவட்ட வாரியாக தகவல்களை தொகுத்து அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளதால் தாமதமின்றி துரிதமாகபணியை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT