Published : 14 Apr 2023 06:45 AM
Last Updated : 14 Apr 2023 06:45 AM
கிருஷ்ணகிரி: பேரிகை அரசு உருது உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்கவும், சேதமான வகுப்பறை மேற்கூரையைச் சீரமைத்து, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பேரிகை ஊராட்சியில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில், கடந்த 1943-ம் ஆண்டில் அரசு உருது தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளி 1963-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 2014-15-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
190 மாணவர்கள்: சுமார் 10 சென்ட் நிலத்தில் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் பேரிகை, அத்திமுகம் அதன் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 190 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கடந்த கல்வியாண்டு முதல் இப்பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியும் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளியின் தரம் உயர்ந்து, மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தபோதும், தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டபோது இருந்த வகுப்பறை கட்டிடத்தில் தற்போது, தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
10-ம் வகுப்பில் 100% தேர்ச்சி: மேலும், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. வகுப்பறை கட்டிடங்களின் மேற்கூரை சேதமடைந்து மழைக் காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் விழும் நிலையுள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாதபோதும் இப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். தற்போது, பள்ளி வகுப்பறை கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்காலிக தடுப்பு: இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: வகுப்பறை கட்டிடத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் வழிந்தோடும் நிலை உள்ளது. தலைமை ஆசிரியர் தனது சொந்த நிதியின் மூலம் மேற்கூரையின் மீது பிளாஸ்டிக் கவர் மூலம் மழைநீர் வகுப்பறைக்குள் விழுவதைத் தற்காலிகமாகத் தடுத்துள்ளார். போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர் சேர்க்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.
இதனிடையே, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று அத்திமுகம் சாலையில் உயர்நிலைப் பள்ளிக்கு 1.20 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அங்கு மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.21.30 லட்சம் மதிப்பில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவில்லை.
சமையல் அறை: எனவே, மாணவர்களின் நலன் கருதிக் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகள் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். மேலும், சமையல் கூடம், கழிவறை, நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதுடன், சேதமான தொடக்கப் பள்ளி வகுப்பறைகளைச் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சமையல் கூடம், கழிவறை, நூலகம், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதுடன், சேதமான தொடக்கப் பள்ளி வகுப்பறைகளைச் சீரமைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT