Published : 08 Apr 2023 05:38 AM
Last Updated : 08 Apr 2023 05:38 AM

தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் வரைவு வெளியீடு: 12-ம் வகுப்பில் செமஸ்டர் முறை அறிமுகம் செய்ய பரிந்துரை

புதுடெல்லி: தேசிய பாடத்திட்ட வடிவமைப்பு தொடர்பான முன்வரைவை நேற்றுமுன்தினம் மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டது. இதில், பள்ளிப் பாடத்திட்ட நடைமுறையில் பல்வேறு புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2 செமஸ்டர்கள்: இந்தப் முன்வரைவானது தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 12-ம் வகுப்புக்கு செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரே பொதுத் தேர்வாக இல்லாமல், இரண்டு செமஸ்டர்களாக தேர்வு எழுதிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு போதிய நேரமும், தேர்வை சிறப்பாக எழுதுவதற்கான வாய்ப்பும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 பாடப் பிரிவுகள்: 9 முதல் 12 வகுப்புக்கான பாடப் பிரிவுகளில் பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கணிதம் மற்றும் கணினி, அறிவியல், தொழிற்கல்வி, உடற்கல்வி, வாழ்வியல், கலை, சமூக அறிவியல், பல்துறை பாடங்கள் என 8 பாடப் பிரிவுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்கள் இந்த 8 பாடப் பிரிவுகள் ஒவ்வொன்
றிலிருந்தும் 2 பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். ஒட்டுமொத்த அளவில் 9, 10 வகுப்புகளுக்கான 2 ஆண்டுகளில் 8 பாடப் பிரிவுகளிலிருந்து 16 பாடங்களை அவர்கள் படிக்க வேண்டும். 11 மற்றும் 12 வகுப்புகளில் இந்த 8 பாடப்பிரிவுகளில் குறைந்தது 3 பிரிவுகளிலிருந்து 4 பாடங்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

4 படிநிலைகள்: அடிப்படை, தொடக்கம், நடுநிலை மற்றும் மேல்நிலை என 4 படிநிலைகளாக பள்ளிப் படிப்பை மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 முதல் 8 வயது என்பது அடிப்படை படிநிலையாகும். 3,4,5 வகுப்புகள் தொடக்க நிலையாகவும், 6,7,8 வகுப்புகள் நடுநிலை வகுப்புகளாகவும் 9,10,11,12 வகுப்புகள் மேல்நிலையாகவும் பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2-ம் வகுப்பு வரையில் எந்த தேர்வும் தேவையில்லை என்று முன்மொழியப்பட்டுள்ளது. குழந்தைகளின் தனித் திறனை அடையாளம் கண்டு அவற்றை ஊக்குவிக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த மதிப்பீடுகள் குழந்தைகளின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, குழந்தைகளுக்கு சுமையானதாக இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளடக்கம் மாற்றம்: பாடங்களின் உள்ளடக்கத்தில் 20 சதவீதம் உள்ளூர் பற்றியதாகவும், 30 சதவீதம் பிராந்தியம் பற்றியதாகவும், 30 சதவீதம் தேசிய அளவிலானதாகவும் 20 சதவீதம் சர்வதேச அளவிலானதாகவும் இருக்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் குறித்து துறைசார் நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை பகிரலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x