Published : 06 Apr 2023 04:49 AM
Last Updated : 06 Apr 2023 04:49 AM
சென்னை: பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு நிறைவு பெற்றது. இறுதி நாளில் நடைபெற்ற கணித பாடத்தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை சுமார் 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இறுதி நாளில் கணிதம், விலங்கியல், வணிகவியல், நர்சிங், ஆடை வடிவமைப்பு உள்ளிட்டபாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் கணிதப் பாடத் தேர்வு மிகக் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிளஸ்-2 கணிதபாடத் தேர்வும் கடினமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபசார விழாக்களும் நடத்தப்பட்டன.
பிளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 முதல் மே 4-ம் தேதிவரை நடைபெற உள்ளன. இதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடஉள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளைமுடித்து, ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாதிரித் தேர்வு: இதற்கிடையே, 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அந்தந்த மாவட்ட வாரியாகஅடுத்த வாரம் தொடங்கி நடைபெறஉள்ளது. இந்நிலையில், ஆண்டுஇறுதித் தேர்வுக்கு முன்னதாக 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு ஒன்றை நடத்தி முடிக்க வேண்டுமென கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான வினாத்தாள் பிரத்யேகமாக பள்ளிகளுக்குஅனுப்பப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT