Published : 05 Apr 2023 07:10 PM
Last Updated : 05 Apr 2023 07:10 PM
புதுச்சேரி: மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதுச்சேரியில் வரும் கல்வியாண்டிலேயே அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா இன்று மாலை நடைபெற்றது. உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது: ''புதுச்சேரியில் கல்வித் துறைக்கு மட்டும் ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. எல்லா திட்டங்களையும் நல்ல முறையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மாணவர்கள் அரசு கொடுக்கும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வி கற்று வல்லவர்களாக உருவாக வேண்டும். மாநிலத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்'' என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அதனடிப்படையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நீட் பயிற்சிக்கான பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டு மே 4-ம் தேதி வரை 30 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இதுவரை அந்த பயிற்சியில் 220 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்து வருகின்றனர். அவர்களுக்குரியை மதிய உணவு, பேருந்து வசதி போன்ற வசதிகளை அரசின் மூலம் உருவாக்கி கொடுத்துள்ளோம்.
நீட் பயிற்சி வகுப்பில் பல்வேறு தனியார் அமைப்புகளும் தங்களுடைய பங்களிப்பை செலுத்தி அவர்களும், அதற்குரிய ஆசிரியர்களை அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிலையை உருவாக்கி கொடுத்திருக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. இதேபோல் மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கும் திட்டம் இந்த பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் அந்தந்த பகுதிகளில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களை வைத்து சீருடை வழங்குவது நடைமுறைபடுத்தப்பட இருக்கின்றது.
இலவச சைக்கிள் திட்டம் முதல்வரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்தந்த பள்ளிகளில் சைக்கிள்கள் ஒப்படைக்கப்பட்டு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. வரும் ஜூன் மாதத்துக்குள் இலவச லேப்டாப் கொடுக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இந்தாண்டு 11,12-ம் தேர்வு முடித்த மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் கிடைக்குமா? கிடைக்கதா? என்ற சந்தேகம் எற்பட்டுள்து. யாரும் பயப்பட வேண்டாம். தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கும்கூட நிச்சயம் லேப்டாப் வழங்கப்படும். வருங்காலத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும்.
புதுச்சேரியில் ஏற்கெனவே கரோனா சம்மந்தமான வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதனை பள்ளிகளில் கடைபிடித்து நடத்த அறிவுறுத்தியுள்ளோம். நிச்சயம் பிள்ளைகள் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் வரும் கல்வியாண்டிலேயே அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் தொடங்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT