Published : 03 Apr 2023 07:03 PM
Last Updated : 03 Apr 2023 07:03 PM

இந்திய மொழிகளை ஊக்குவித்து உலகத் தர அறிவியலை உருவாக்க முடியும்: திரவுபதி முர்மு

புதுடெல்லி: இந்திய மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம் உலகத் தரத்திலான அறிவையும் அறிவியலையும் மிகப் பெரிய அளவில் உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ''இந்திய மொழிகளை ஊக்குவிப்பதன் மூலம் உலகத் தரத்திலான அறிவையும் அறிவியலையும் மிகப் பெரிய அளவில் உருவாக்க முடியும்.

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டப் படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ ஆகியவற்றை முடித்தவர்களில் 55 சதவீதம் பேர் பெண்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், இன்று தங்கப் பதக்கம் பெற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களே.

தங்களது பொறுப்புகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக பல மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்தி்ரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் அத்தகைய மாணவர்களுக்கு கல்வியை வழங்க உதவுகின்றன.

பல்வேறு வேலைகளை செய்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து திறன் மேம்பாட்டிற்காக கல்வி பெறுகிறார்கள். இதுபோன்று கல்வி பெறுபவர்கள், வேலையின்மையிலிருந்து வெளியே வர முடியும். எனவே, தொலைதூரக் கல்வியானது சமூக-பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுக்கிறது.

கல்வியின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், 2035-ம் ஆண்டிற்குள் உயர் கல்வியில் 50 சதவீத மொத்த சேர்க்கை விகிதத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதில் இந்தப் பல்கலைக்கழகம் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது'' என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x