Last Updated : 03 Apr, 2023 06:20 PM

3  

Published : 03 Apr 2023 06:20 PM
Last Updated : 03 Apr 2023 06:20 PM

மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக புதுப்பொலிவுடன் இயங்கும் மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையம்

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக மதுரை அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் புதுப்பொலிவு பெற்று இயங்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே, மின் வாரியம், தொழிற்சாலைகளில் பணியில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் அரசு ஐடிஐக்களை தேடி படையெடுத்த காலம் உண்டு. பாலிடெக்னிக், தொழில்நுட்ப கல்லூரிகளின் வளர்ச்சியால் ஐடிஐக்கள் சற்று மவுசு குறைந்தது என்றாலும், இன்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு சுயதொழில், அரசு, தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலை உள்ளது. இருப்பினும், அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை நோக்கி இழுக்கும் வகையில், மதுரை புதூர் பகுதியில் செயல்படும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் புதுப் பொலிவு பெற்று இயங்குவதை காண முடிகிறது.

இது குறித்த புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் எஸ்.ரமேஷ்குமார் கூறியது: ''மதுரை கே.புதூர் பகுதியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சுமார் 8.69 ஏக்கர் பரப்பளவில் பயிற்சிக்கான கட்டிட வசதிகளுடன் இயங்குகிறது. பிட்டர், டர்னர், எலக்ட்ரிக்கல், மோட்டர் மெக்கானிக், கணினி உட்பட 20 பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சுமார் 1440 மாணவர்கள் படிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் பணிபுரிகின்றனர். இப்பயிற்சி நிலையம் பழமை மாறாமல் கட்டிடங்களை புதுப்பித்து, தனியார் கல்வி நிறுவனத்திற்கு இணையாக மாற்றியுள்ளோம்.

முகப்புப் பகுதி , மாணவர்கள் பயிற்சித் தளம், வகுப்பறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் ஒயிட் வாஸ், பெயின்ட் அடித்து சீரமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். பயிற்சி தவிர பிறநேரத்தில் ஆளுமைகள், சாதனையாளர்கள் பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் ஆடியோ, வீடியோ வசதி செய்யப்பட்டுள்ளது. காலையில் வகுப்பறைக்கு போகும் முன்பே நாளிதழ்களை படிக்க, நுழைவிடத்தில் ஏற்பாடு செய்துள்ளோம்.

தன்னம்பிக்கை ஏற்படுத்த வாரந்தோறும் இத்துறையில் நிபுணத்துவமான நபர்களை அழைத்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். ரூ.15 முதல் 25 ஆயிரம் சம்பளத் தில் வளாக தேர்வு மூலம் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்று தருகிறோம். ஒவ்வொருக்கும் 5கம்பெனிகளில் தேர்வாகும் வகையில் இத்தேர்வுகளை ஏற்பாடு செய்கிறோம். பழகுநர் பயிற்சி தவிர, படிக்கும்போது, பணியிடை பயிற்சிக்கும் பல்வேறு கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இதற்காக மதுரையில் டிவிஎஸ், ஹைடெக் அராய் உள்ளிட்ட 45 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம்.

ரயில்வே, மின்வாரியம், விமான நிலையம், ஆவனி போன்ற நிறுவனங்களுக்கு பழகுநர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறோம். பயிற்சி நிலையத்திற்கு தேவையான கேட் உள்ளிட்ட வசதிகளை மாணவர்களே தயாரித்து கொடுத்துள்ளனர். இளைய தலைமுறைக்கான மின்சார வாகனம், ரோபோடிக், கணினியில் இயங்கும் இயந்திரங்கள் தயாரிப்பு, இயந்திர உற்பத்தி கட்டுபாடு போன்ற புதிய பயிற்சிகளும் விரைவில் தொடங்க இருக்கிறோம்.

பிறருக்கு வேலை வழங்கும் தொழில் முனைவோருக்கான 'ஸ்டார் அப் சென்டர்', தங்களுக்கு தேவையான ஆட்களை கம்பெனிகளே தேர்ந்தெடுக்கும் 'திறன் சுயவரம்', சிறந்த மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி, வழிகாட்டுதலுக்கென 'எலைட் பயிற்சி', சிறந்த பயிற்றுநர்களை ஊக்கப் படுத்தும் 'சிந்தனை தொட்டி' போன்ற எதிர்கால முக்கிய திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மாவட்ட பயிற்சித் திறன் அலுவலக உதவி இயக்குநர் செந்தில்குமார், ஐடிஐக்கான வேலை வாய்ப்பு அலுவலர் வாசன் பாபு போன்ற பயிற்றுநர்களின் ஒருங்கிணைப்புடன் இப்பயிற்சி வளாகச் சூழல் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகிறது. முன்னாள் மாணவர்கள், பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பில் புதுப்பித்துள்ளோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x