Published : 21 Mar 2023 03:14 AM
Last Updated : 21 Mar 2023 03:14 AM

தமிழக பட்ஜெட் 2023-2024: 4, 5-ம் வகுப்புகளுக்கும் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் - பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி

தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை எளிதில் கிடைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், புதிய கட்டிடங்கள் கட்டவும் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.

நடப்பாண்டில், ரூ.2 ஆயிரம் கோடி செலவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் என மொத்தம் ரூ.1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

எண்ணும் எழுத்தும் திட்டம் 2025-ம் ஆண்டுக்குள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அடிப்படைக் கல்வியறிவும் எண்கணிதத் திறனும் அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு அடிப்படையில் வரும் நிதி ஆண்டில் ரூ.110 கோடி செலவில் 4, 5-ம் வகுப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

பல்வேறு துறைகளின்கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அனைத்து மாணவர்களுக்கும் தரமானக் கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை, இந்துசமயம் மற்றும் அறநிலையத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டுவரப்படும்.

பல்வேறு அரசுத் துறைகள் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் உள்ள தேவையற்ற தாமதங்களைக் குறைக்கவும், தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உரிய நேரத்தில் நேரடி பணப்பரிமாற்ற முறையில் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையிலும் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணையதளம் உருவாக்கப்படும். பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x