Published : 12 Sep 2017 10:41 AM
Last Updated : 12 Sep 2017 10:41 AM

மாற்றத்தை ஏற்றுக் கொண்டாடும் பள்ளி!

ழு ஆண்டுகளுக்கு முன்பு நிலவியல் பாட ஆசிரியராக கொல்கத்தாவில் உள்ள புனித ஆண்ட்ரூஸ் பொதுப் பள்ளியில் சேர்ந்தார் அவர். அன்று அவருடைய பெயர் ஹிரண்மே. எல்லா மாணவ- மாணவிகளோடும் தோழமையோடு பழகி, மிகச் சிறப்பான முறையில் பாடம் கற்பித்ததால் அவர் எல்லோருக்கும் பிரியமான ஆசிரியர். நடை, பாவனை, தோற்றம், குரல் ஆகியவற்றில் மற்ற ஆசிரியர்களைப் போல அல்லாமல் வித்தியாசமாகக் காணப்பட்டாலும் அவரை யாரும் கேலி செய்ததில்லை.

ஒரு நாள் தன்னுடைய மாணவ-மாணவிகளை அழைத்துப் பேச வேண்டும் என்றார். தான் ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளவிருப்பதாகவும் கூடிய விரைவில் மீண்டும் அவர்களிடம் வந்துவிடுவதாகவும் அறிவித்தார். சில மாதங்கள் கழித்து முன்naiக்காட்டிலும் மகிழ்ச்சியுடன், புதிய பெயருடன், புதிய பாலின அடையாளத்துடன் வந்துசேர்ந்தார். ஹிரண்மே இப்போது சுசித்ரா.

அவருடைய மாணவர்கள் முன்பைப்போலவே அதே அன்பு, மரியாதையுடன் தங்களுடைய ஆசானிடம் பாடம் கற்றுக்கொள்கிறார்கள். அவருடன் பணிபுரியும் சக ஆசிரியர் - ஆசிரியைகளும் அவரை ஏற்றுக்கொண்டார்கள். சொல்லப்போனால், அவர் ஹிரண்மேவாக இருந்த காலத்திலேயே தான் ஆண் உடலில் சிக்கித் தவிக்கும் பெண் எனச் சக பணியாளர்களிடம் வெளிப்படையாகக் கலந்துரையாடி இருக்கிறார்.

தன்னைப் பெற்றோரும் சுற்றத்தாரும் நிராகரித்தபோதும் பள்ளி, கல்லூரிப் படிப்பை விடாமுயற்சியோடு படித்துமுடித்த கதையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். கேலி, சீண்டலுக்கு மத்தியில் மனோ திடத்துடன் படித்து ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் பல்கலைக்கழகத்திலும், நிர்வாகப் படிப்புக்காக கொல்கத்தாவில் பிரசித்தி பெற்ற இ.ஐ.ஐ.எல்.எம். பல்கலைக்கழகத்திலும் முதுநிலை பட்டங்கள் பெற்ற போராட்டக் கதையை விளக்கியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பூந்தேல்கந்த் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்பையும் முடித்துச் சாதனையாளராக நிமிர்ந்து நின்றிருக்கிறார்.

ஆணாகப் பணியில் சேர்ந்தவர் உடல்ரீதியாகத் தான் முழுமையாகப் பெண்ணாக மாற வேண்டியதற்கான அறுவை சிகிச்சையைச் செய்ய முடிவெடுத்தபோது தன்னுடைய பள்ளித் தலைமை ஆசிரியையிடம் அதைத் தெளிவாக விளக்கினார். அந்தத் தருணத்தில் பணிப் பாதுகாப்புக்கான முழு உத்தரவாதத்தையும் பள்ளி நிர்வாகம் அவருக்கு அளித்தது. இன்று சுசித்ராவை மீண்டும் புனித ஆண்ட்ரூஸ் பொதுப் பள்ளி கொண்டாடுகிறது.

மாற்றுப் பாலினம் குறித்த புரிந்துணர்வை நம்முடைய கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் எனச் சமீபகாலமாக உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் ஒரு கல்விக்கூடத்திலேயே சீரிய முறையில் அதை நடைமுறைபடுத்தி இருக்கும் இப்பள்ளி நல்ல மாற்றத்துக்கான தொடக்கப் புள்ளி .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x