Published : 17 Mar 2023 06:03 AM
Last Updated : 17 Mar 2023 06:03 AM

‘இந்து தமிழ் திசை உங்கள் குரல்’ செய்தி எதிரொலி | திருப்பத்தூரில் ‘நீட்' தேர்வு எழுதலாம்: ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உறுதி

திருப்பத்தூர்: ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் ‘உங்கள் குரல்' பதிவு மூலம் வெளியான செய்தியை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 'நீட்' தேர்வு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேரு வதற்கான ‘நீட்’ தேர்வு ஆண்டு தோறும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட பிறகு 2020-ம் ஆண்டு நீட் தேர்வுக்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் பட்டியலில் திருப்பத்தூர் மாவட்டம் இடம் பெறாததால், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிற மாவட்டங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் நிலை உருவானது. இது குறித்து வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோகன் என்பவர் ‘இந்து தமிழ் திசையின்' உங்கள் குரல் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வழக்கம்போல நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்தார்.

அதன்பேரில், இந்து தமிழ் திசை நாளிதழில் உங்கள் குரல் பகுதியில் ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும்’ என்ற செய்தி நேற்று இடம் பெற்றது. இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் ஏலகிரி மலை தொன்போஸ்கோ கலை மற்றும் அறியவில் கல்லூரி மற்றும் வாணியம்பாடி மருதர் சேகரி ஜெயின் மகளிர் கல்லூரி என 2 தேர்வு மையங்களில் சுமார் 1,800 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

அதேபோல், 2022-ம் கல்வி யாண்டில் வாணியம்பாடி மருதர் சேகரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 964 பேர் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில், நடப்பாண்டில் வாணியம்பாடி மருதர் சேகரி ஜெயின் மகளிர் கல்லூரியிலேயே நீட் தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எந்த ஒரு சிரமம் இல்லாமல் இம்மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதலாம்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x