Published : 15 Mar 2023 04:52 AM
Last Updated : 15 Mar 2023 04:52 AM

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியது - மொழிப்பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தகவல்

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை அஸ்தினாபுரம் அரசு பள்ளியில் தேர்வெழுத தயாரான மாணவர்கள்.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. மொழிப்பாடத் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 3,184 மையங்களில் 7.5 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் மட்டும் 180 மையங்களில் 40,000-க்கும் மேற்பட்டோர் எழுதினர்.

முதல் நாளான நேற்று மொழிப்பாடத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 90 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் கேள்விகள் தவிர மற்ற பகுதிகள் எளிதாக பதிலளிக்கும் விதத்தில் இருந்தன. சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆங்கிலப் பாடத்தேர்வு நாளை (மார்ச் 16) நடைபெற உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு ஏப்.5-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளன.

இதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்தேர்வு இன்று (மார்ச் 15) நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,185 மையங்களில் 8.6 லட்சம் பேர் எழுதவுள்ளனர். சென்னையில் மட்டும் 46,932 பேர் எழுதுகின்றனர். பொதுத்தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க தேர்வுத் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உளவியல் ஆலோசனை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உளவியல் ரீதியாகவும்,உடல் ரீதியாகவும் பாதிக்கப்படவாய்ப்புள்ளதால் ஆலோசனைகளுக்கு 104 மருத்துவ சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடத்தில் பயமும், பதற்றமும் அதிகரிக்கும். இதனால், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, படித்தவற்றை நினைவில் கொள்ளதடுமாறுவர். சிலருக்கு பயத்தால் காய்ச்சல் பாதிப்புகூட ஏற்படலாம். அவர்களுக்காக, பொது சுகாதாரத்துறையின் 104 மருத்துவ சேவை மையம் செயல்படுகிறது. இந்த மையத்தில், மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்கள், தொடர்பு கொண்டு பேசலாம்.

அதேபோல், மாணவர்களின் பெற்றோரும் தொடர்பு கொண்டு,தங்கள் பிள்ளைகளின் நிலையை கூறி, அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கலாம். திடீரென ஏற்பட்ட காய்ச்சலுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைக்கான பரிந்துரையையும் பெறலாம். மாணவர்கள் பயம், பதற்றமின்றி தேர்வை எழுத வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x