Published : 13 Mar 2023 05:57 PM
Last Updated : 13 Mar 2023 05:57 PM
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் தேர்வு எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 13) தொடங்கி ஏப்.3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,225 மையங்களில் 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுத இருந்தனர். 23,747 தனித்தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறைகைதிகளும் இதில் அடங்குவர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 13) நடைபெற்ற மொழித் தேர்வை 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதவில்லை எனபது தெரியவந்துள்ளது. இதன்படி, பள்ளி மாணவர்களில் 49,559 பேரும், தனித்தேர்வர்களில் 1,115 பேரும் தேர்வை எழுதவில்லை என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும், வேலூரில் 2 மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டதாகவும் தமிழக பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT