Published : 13 Mar 2023 06:34 AM
Last Updated : 13 Mar 2023 06:34 AM

அரசுப் பள்ளிகளுக்கு முன்னாள் மாணவர்கள் நன்கொடை வழங்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு நன்கொடைவழங்குவதற்கு முன்னாள் மாணவர்கள் முன்வர வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்தார்.

அரசுப் பள்ளிகள் தரத்தை உயர்த்துவதற்கு நிதியுதவி பெறுவதற்காக ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ (நம்ம பள்ளி) எனும் திட்டத்தை தமிழக அரசு கடந்த டிசம்பரில் தொடங்கியது. இந்ததிட்டத்தின்கீழ் முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இதன்மூலம் பெறப்படும் நிதிகள் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் நன்கொடைவழங்க முன்னாள் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்மில் பலர் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்தவர்களாக இருப்போம். நாம் படித்த பள்ளி எப்படியிருக்கிறது என்று எண்ணம் அவ்வப்போது நமக்கு வந்து செல்லும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் சொந்த ஊருக்கு செல்வதே அரிதாகிவிட்ட சூழலில் படித்த பள்ளிகளுக்கு சென்று பார்வையிட நேரம் கிடைப்பதும் கடினமே. ஆனாலும், நாம் படித்த பள்ளியை கைவிடக்கூடாது.

உங்கள் ஊருக்கு செல்லும்போது, மறக்காமல் நீங்கள் படித்தபள்ளிக்கு சென்று பார்க்க முயலுங்கள். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த விரும்பினால் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுங்கள். சொந்தஊருக்கு வர நேரம் இல்லாதவர்கள் https://nammaschool.tnschools.gov.in/#/alumini என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்கள் பள்ளிக்கு உதவலாம்.

பள்ளியில் உடன் படித்தவர்களின் விவரங்கள் விரைவில் அந்த தளத்தில் காணலாம். இதன்மூலம் உங்கள் நண்பர்களை கண்டுபிடித்து அவர்களுடன் தொடர்புகளை உருவாக்கி கொள்ளலாம். வகுப்பு நண்பர்கள் குழுவாக இணைந்தோ, தனிநபராகவோ பள்ளிக்கு உதவலாம். பள்ளிக்கூடம் நம் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கம். அந்த பள்ளிக்கூடத்துக்கு உங்களால் இயன்றதை செய்ய முன்வாருங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x