Published : 12 Mar 2023 06:40 AM
Last Updated : 12 Mar 2023 06:40 AM
சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 13) தொடங்குகிறது. இந்த தேர்வை 8.75 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 225 மையங்களில் மொத்தம் 8.75 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் மொத்தம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 819 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 45 மாணவர்கள், கலை பாடப்பிரிவில் 14 ஆயிரத்து 162 மாணவர்கள், தொழிற்கல்வி பாடப்பிரிவில் 46 ஆயிரத்து 277 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர்.
அந்தவகையில் சென்னையில் மட்டும் 180 மையங்களில் 45 ஆயிரத்து 982 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
அடிப்படை வசதிகள்: பிளஸ்-2 பொதுத்தேர்வுகளை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் ஆகிய சிறைகளில் உள்ள தேர்வு மையத்திலும் சிறைவாசிகள் எழுதுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்க அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவு ரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தேர்வுத்துறை சார்பில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுமையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையத்துக்குள் தேர்வர்களும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்போன் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4,235 எண்ணிக்கையில் பறக்கும் படை குழுக்கள், முதன்மை கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள், தேர்வர்கள், பொது மக்கள் தங்களது புகார்கள், கருத்துகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் 9498383081, 9498383075 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், தேர்வில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT