Published : 06 Mar 2023 07:49 AM
Last Updated : 06 Mar 2023 07:49 AM
சென்னை: கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பில் ஏழை மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக இந்திய கம்பெனி செகரட்டரீஸ் கல்வி நிறுவனத்தின் (ஐசிஎஸ்ஐ) தலைவர் மணீஷ் குப்தா தெரிவித்தார்.
இந்தியாவில் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வை ஐசிஎஸ்ஐ (Institute of Company Secretaries of India) நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் தேசியத் தலைவர் மணீஷ் குப்தா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரூ.10 கோடி அளவுக்கு வர்த்தகம் கொண்ட நிறுவனங்கள் தகுதிபெற்ற கம்பெனி செகரட்டரியை நியமிக்க வேண்டும் என்பது சட்ட நடைமுறை. நம் நாட்டில் ரூ.10 கோடி வர்த்தகம் கொண்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. எனவே, கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை முடிப்பவர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்புகள் உள்ளன. பங்குச்சந்தையில் தொண்டு நிறுவனங்களின் பங்குகளும் பட்டியலிடப்படும் எனசெபி சமீபத்தில் அறிவித்துள்ளது. எனவே, இப்படிப்பை படிப்போருக்கு வேலைவாய்ப்புகள் இன்னும் அதிகமாகும்.
2 லட்சம் மாணவ, மாணவிகள்
கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பை தேசிய அளவில் 2 லட்சம்மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மற்ற தொழில்சார் படிப்புகளைவிட, இந்த படிப்புக்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. இது முதுநிலை பட்டப் படிப்புக்கு இணையானது என்று யுஜிசி அறிவித்துள்ளது. இப்படிப்பை படிக்கும் மாணவர்கள் பட்டச்சான்றிதழை டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கம்பெனி செகரட்டரிஷிப் படிப்பில் ஏழை மாணவர்கள் (குடும்பஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்), எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச மாணவர்கள் ஆகியோருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. மேலும், ஐஐஎம், தேசிய சட்ட பல்கலைக்கழகம் போன்றவற்றில் படிக்கும் சிறந்தமாணவர்கள் கம்பெனி செகரட்டரிஷிப் படிக்க கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
18 சதவீதம் பேர் தேர்ச்சி
துணைத் தலைவர் பி.நரசிம்மன் கூறும்போது, ‘‘ஆண்டுதோறும் கம்பெனி செகரட்டரிஷிப் தேர்வு நடத்தப்படுகிறது. இறுதி தேர்வில் சுமார் 18 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர். சூழலுக்கு ஏற்ப இப்படிப்புக்கான பாடத்திட்டத்தை அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறோம். ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் அவ்வப்போது பணி மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT