Published : 22 Feb 2023 05:48 PM
Last Updated : 22 Feb 2023 05:48 PM
சென்னை: மத்திய, மாநில அரசு தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ‘நோக்கம்’ செயலியை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் காணொலி (YouTube channel) ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது.
இந்த காணொலியின் நீட்சியாக இக்கல்லூரி போட்டித் தேர்வுகளுக்கென்றே ‘செயலி’ ஒன்றை உருவாக்கியுள்ளது. ‘நோக்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இச்செயலியின் மூலம் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சிக் காணொலிகளைக் காண்பதோடு அதற்கான பாடக் குறிப்புகளையும் (notes) இச்செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் சிறப்பம்சமே மாதிரித் தேர்வுகள்தான். ஒவ்வொரு பாடத்திலும் பலவிதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக்கொடுக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தயாரிப்பின் நிலையை அவ்வப்போது சுயமதிப்பீடு செய்து கொள்ள உதவும்.‘நோக்கம்’ செயலியை ப்ளேஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT