Published : 17 Feb 2023 04:39 AM
Last Updated : 17 Feb 2023 04:39 AM
சென்னை: பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் 21 பட்டப் படிப்புகள் அரசுப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக ஏற்கப்படாது என்று உயர் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உயர் கல்வியில் பல்வேறு புதிய படிப்புகளை பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன. இந்த படிப்புகளில் பட்டம் பெறுபவர்களும் அரசுப்பணியில் சேர விண்ணப்பிக்கின்றனர். இவர்களது சான்றிதழ்களை சரிபார்ப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் எந்தெந்த பட்டப் படிப்புகள் ஏற்கெனவே உள்ள படிப்புகளுக்கு இணையானது என்பதை முடிவு செய்து அதன் விவரத்தை உயர் கல்வித்துறை வெளியிட்டு வருகிறது.
அதன்படி பல்வேறு பல்கலை.கள் சார்பில் வழங்கப்படும் 21 படிப்புகள் அரசுப் பணிக்கான கல்வித்தகுதிக்கு இணையற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: கோவை தொழில்நுட்பக் கல்லூரி வழங்கும் எம்.எஸ்சி பயன்முறை (அப்ளைடு) வேதியியல், பாரதியார் பல்கலை., திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் எம்.எஸ்சி ஆர்கானிக் வேதியியல், திருச்சி நேஷனல் கல்லூரி எம்.எஸ்சி பகுப்பாய்வு வேதியியல், பனாரஸ் ஐஐடி மற்றும் வாரணாசி இந்து பல்கலை. வழங்கும் எம்.டெக் தொழிற்துறை வேதியியல், பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ்சி வாழ்க்கை அறிவியல் ஆகியவை எம்.எஸ்சி வேதியியலுக்கு இணையானவை அல்ல. இவர்கள் எம்.எஸ்சி வேதியியல் கல்வித்தகுதிக்கான அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கும் எம்ஏ மொழியியல், எம்ஏ ஆங்கிலப் படிப்புக்கு இணையானதாக ஏற்கப்படாது. மேலும், கோவா பல்கலை., திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை. மற்றும் பெங்களூர் பல்கலை. வழங்கும் பிஏ ஆங்கிலம் அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு இணையாக கருதப்படாது. மேலும், சென்னை பல்கலை. வழங்கும் பி.காம் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப், அழகப்பா பல்கலை.யின் எம்.காம் கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகியவை அதன் மூலப் படிப்புகளான பி.காம், எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை அல்ல.
இதுதவிர திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் எம்.எஸ் தகவலமைப்பு மற்றும் பயன்பாடு (பகுதிநேர) படிப்பானது எம்.எஸ்சி கணினி அறிவியலுக்கும், விஐடி பல்கலை.யின் எம்.எஸ்சி மின்னணுவியல் படிப்பு, எம்.எஸ்சி இயற்பியலுக்கும் இணையானதல்ல. அழகப்பா பல்கலையின் பி.எஸ்சி மின்னணுவியல் படிப்பு, இ.எம்.ஜி.யாதவ் மகளிர் கல்லூரி
யின் பி.எஸ்சி இயற்பியல் &தகவல் தொழில்நுட்பம், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை.யின் பி.எஸ்சி அறிவியல் ஆகியவை அரசுப் பணிக்கான பி.எஸ்சி இயற்பியல் கல்வித் தகுதிக்கு இணையாக ஏற்கப்படாது.
புதுச்சேரி பல்கலை உட்பட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் புதிதாக அறிமுகம் செய்துள்ள 20 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள் அரசுப் பணிக்கு ஏற்றவை எனவும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘புதிதாக அறிமுகம் செய்யப்படும் பட்டப் படிப்புகள் அந்தந்த மூலப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் 70 சதவீத பாடங்களை கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை மூலப் படிப்புக்கு இணையானதாக கருதி அரசுப் பணிக்கான கல்வித் தகுதிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் அடிப்படையில்தான் தற்போதைய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT