Published : 16 Feb 2023 07:12 AM
Last Updated : 16 Feb 2023 07:12 AM
சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான `க்யூட்' தேர்வு விண்ணப்பப் பதிவில் தமிழக மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண்ணைப் பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும்அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில்இளநிலை, முதுநிலை படிப்புகளில்சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (க்யூட்) முறைகடந்தாண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டுக்கான க்யூட் தேர்வுக்குரிய விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பப் பதிவின்போது மாணவர்கள் தங்கள் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணைக் குறிப்பிட வேண்டும்.
அதேநேரம் கரோனா பரவலால் தமிழக மாணவர்களுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண் குறிப்பிடாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதன் காரணமாக க்யூட் தேர்வுக்குத் தமிழக மாணவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல்நிலவுகிறது.
இதேபோல், ஜேஇஇமுதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் பிரச்சினை வந்தது. அதன்பின்னர் பள்ளிக்கல்வித் துறையின் கோரிக்கையை ஏற்று தமிழக மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
அதேபோல், க்யூட் நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிப்பதில் இருந்த சிரமங்கள் சரிசெய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி நாகராஜன் கூறுகையில், “தமிழக மாணவர்களுக்கு மட்டும் க்யூட் நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் பகுதி மறைக்கப்படும். தமிழ்நாடு என்ற காலத்தை அவர்கள் பூர்த்திசெய்ததும், மதிப்பெண் விவரங்கள் கேட்கப்படாது.
இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை இயக்குநரிடமும் தகவல் தெரிவித்துவிட்டோம்” என்றார். க்யூட் நுழைவுத் தேர்வுக்கு பிளஸ்-2 பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT