Published : 29 Jan 2023 04:30 AM
Last Updated : 29 Jan 2023 04:30 AM
நாகப்பட்டினம்: வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் மரத்தடியிலும், தகரக் கொட்டகையிலும் வகுப்புகள் நடைபெற்று வருவதால், கூடுதல் வகுப்பறைகள் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி கடந்த 1984-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி நாகை மாவட்டத்தின் மாதிரி மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது.
இங்கு, எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 1,167 மாணவர்கள் படித்து வருகின்றனர். 50 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் 100 சதவீத தேர்ச்சி மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்தாண்டு இப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி அபிநயா, நீட் தேர்வில் வெற்றிபெற்று அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இப்பள்ளியில் மாணவர்கள் படிக்க போதுமான கட்டிட வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கூறியது: நிரந்தர வகுப்பறை கட்டிடங்கள் இல்லாததால் பிளஸ் 1 வகுப்பு தகரக் கொட்டகைகளிலும், மரத்தடியிலும் நடைபெற்று வருகிறது. வகுப்பறை கட்ட அரசு நிதி ஒதுக்கியும், அந்த நிதி இதுவரை கிடைக்கவில்லை. வகுப்பறை இல்லாதபோதும் நடப்பாண்டு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளது.
கூடுதலாக இப்பள்ளியில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகள் இருந்தாலும் ஆய்வகம் மற்றும் முறையான நூலக வசதி இல்லை. எனவே, இப்பள்ளியை கல்வித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறைகள் கட்ட பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT