Published : 24 Jan 2023 12:52 AM
Last Updated : 24 Jan 2023 12:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுமா என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 91 உயா்நிலை, 99 மேல்நிலை, 159 நடுநிலைப்பள்ளிகள் என 349 அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த நவம்பர் 23-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த கலைத் திருவிழாவில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தமிழ் மற்றும் ஆங்கில அழகு கையெழுத்து, நாட்டுப்புற பாடல், வில்லுபாட்டு, வாத்திய கருவிகள் இசைத்தல், நடனம், நாடகம், கதை எழுதுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட 186 வகையான போட்டிகள் நடைபெற்றது.
இதில் பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளில் 6,7,8-ம் வகுப்புகளில் 110 பேரும், 9,10-ம் வகுப்பு பிரிவில் 197 பேரும், 11,12- ம் வகுப்பில் 205 பேர் என மொத்தம் 512 பேர் வெற்றி பெற்றனர். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்றனர். மாநில போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்காததால் மாணவர்களும், பயிற்சி அளித்த ஆசிரியர்களும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டபோது, "பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT