Published : 17 Jan 2023 04:20 AM
Last Updated : 17 Jan 2023 04:20 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பொன்னாத்தாவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சிந்துஜா, கையெழுத்துப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று கலையரசி பட்டம் வென்றுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைத்திறன் மற்றும் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன. இயல், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் நடந்த 50-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்
பள்ளி அளவில் தொடங்கி, வட்டாரம், மாவட்ட அளவில் தேர்வு பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர். இப்போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கலையரசன் பட்டமும், மாணவியருக்கு கலையரசி பட்டமும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னாத்தாவலசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவி சிந்துஜா, கையெழுத்துப் போட்டியில் முதலிடம் பெற்றார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு கலையரசி பட்டம் வழங்கி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கலையரசி பட்டம் வென்ற மாணவி சிந்துஜாவுக்கு, மொடக்குறிச்சி ஒன்றிய வட்டார கல்வி அதிகாரிகள் வனிதா ராணி, சிவானந்தம், சுரேஷ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுதா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT