Published : 08 Jan 2023 04:37 AM
Last Updated : 08 Jan 2023 04:37 AM
புதுச்சேரி: பள்ளியில் ஒரு வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பாடத் திட்டம்தான். ஆனால், அனைத்து மாணவர்களும் சமமான மதிப்பெண்களை பெறாமல் போவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமான காரணம் படித்த பாடத்தை நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் மறந்து போவது..
மாணவர்கள் எளிமையாக பொருள் புரிந்து படிக்கவும், பாடங்களை நினைவில் பதிய வைத்துக்கொள்ளவும் புதிய வழிமுறையை கையாண்டு வருகிறார் புதுச்சேரி கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் செந்தில்.
புதுச்சேரி மூலகுளம் பகுதியைச் சேர்ந்த இவர், இப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். பாடங்களில் வருகிற புதிய மற்றும் கடினமான வார்த்தைகளுக்கு ‘புகைப்படச் சொல் அட்டை’ (பிக்சர் வேர்ட்ஸ்) என்ற முறையில், வார்த்தைகளுடன் கூடிய படங்களை தயார் செய்து கொடுத்து பயிற்றுவிக்கிறார்.
அதாவது, ஒரு பாடத்தில் வரும் முக்கியமான மற்றும் கடினமாக வார்த்தைகளை வகைப்படுத்தி கொள்கிறார். பிறகு அந்த வார்த்தைக்கு ஏற்ற புகைப்படத்தை வலைதளத்தில் தேர்வு செய்து, இந்த புகைப்பட சொல் அட்டையை தயார் செய்கிறார். இந்த புகைப்பட சொல் அட்டையில் குறிப்பிட்ட வார்த்தையின் ஆங்கில சொல் மற்றும் அதற்கான தமிழ் சொல் இரண்டையும் இடம் பெறச் செய்கிறார். இதனை நகல் எடுத்து ஒவ்வொரு மாணவருக்கும், ‘ஃபைல்’ போட்டு கொடுத்து படிக்க வைக்கிறார்.
மேலும், இந்த புகைப்பட சொல் அட்டையை ஆங்காங்கே வகுப்பறைகளில் ஒட்டி வைக்கிறார். முக்கிய பாடம் முடியும் வரையில் அவை அங்கு இருக்கின்றன. அடுத்த பாடங்கள் வரவும் அடுத்த சொல் அட்டைகள் இடம் பெறுகின்றன. கூடவே, இந்த சொல் வார்த்தைகள் அடங்கிய அட்டைகளை தொகுத்து, வீடியோவாக உருவாக்கி வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் டிவியில் போட்டு காண்பிக்கிறார்.
கூடவே, ஒவ்வொரு சொல்லையும் மாணவர்கள் எவ்வாறு ஏற்ற இறக்கத்துடன் படிக்க வேண்டும் என்பதை ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றம் செய்து கற்பிக்கிறார். பாடப்புத்தகத்தில் வருகின்ற ஒவ்வொரு பாடத்துக்கும் இந்த முறையையே கையாள்கிறார். இந்த சொற்கள் மனதில் பதிய, தனியாக ‘ரெக்கார்ட் நோட்’ ஒன்றையும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் போட்டுள்ளார்.
“ஒரு பாடத்தின் முக்கிய வார்த்தைகள் ஒரு மாணவனின் மூளைக்குள் இறங்கி விட்டால் அந்தப் பாடம் எளிதில் பிடிபட்டு விடும். அதன் பிறகு நாம் கூறும் எளிய விளக்கங்கள் அந்த மாணவனை அந்தப் பாடத்திற்குள் இழுத்து சென்று விடும்” என்று கூறும் செந்தில், வகுப்பறையிலேயே ‘ரீடிங் கார்னர்’ அமைத்து 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அடுக்கி வைத்துள்ளார். அவற்றை மாணவர்கள் தாங்களாகவே எடுத்து படித்து வருகின்றனர்.
“கரோனாவிற்கு பிறகு மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய இம்மாதிரியான முறைகளை கடைப்பிடிக்கிறேன். என் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் இம்முயற்சியைப் பாராட்டி, ‘ஸ்மார்ட் டிவி’ வாங்கிக் கொடுத்துள்ளனர். இதில் நான் நியூ வேர்ட்ஸ், லெசன் ரீடிங், அனிமேஷன், பப்பட் வீடியோக்கள், ஸ்போக்கன் இன்கிளீஷ் கிளாஸ், ஜி.கே போன்வற்றை போட்டுக் காண்பித்து, கற்றுத் தருகிறேன்.
இது தவிர யோகா, ஆங்கில உரையாடல் பயிற்சியும் எடுக்கப்பட்டு யூடியூபில் (https://youtube.com/@innovationsineducation7225) பதிவேற்றம் செய்கிறேன். இதனை 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் பார்த்து பயில்கின்றனர்” என்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ‘சில்ரன்ஸ் எஜிகேஷன் ஆடியோ-வீடியோ பெஸ்டிவெல்’ நிகழ்வில் ஆசிரியர் செந்திலின் இந்த முயற்சிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. தொடர்ந்து மண்டல மற்றும் மாநில அறிவியல் கண்காட்சியில் தனது மாணவர்களை பங்கேற்கச் செய்து, பரிசுகளை பெற வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT