Published : 03 Jan 2023 07:38 PM
Last Updated : 03 Jan 2023 07:38 PM
மதுரை: மதுரை நகருக்குள் மிக குறைந்த கல்விக் கட்டணத்தில் ஏழை மாணவிகள் கல்வி பயிலும் ஒரே அரசு கல்லூரி மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி. இதற்கு அடுத்து குறைந்த கட்டணத்தில் மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் செயல்படுவது காமராசர் பல்கலைக்கழக கல்லூரி மட்டுமே. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் ஓரளவு குறைந்த கட்டணம் வசூலித்தாலும், சுயநிதி பிரிவில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும். அரசு, பல்கலை கல்லூரியில் சுயநிதி , ரெகுலர் பாடப்பிரிவுகளுக்கு ஒரே கல்வி கட்டணமே வசூலிக்கப்படுகிறது என அக்கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கிறது.
காமாராசர் பல்கலைக்கழக கல்லூரி 1994ல் ஒரு முன்மாதிரி கல்லூரியாக தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் இரு சுழற்சியிலும் சுமார் 3,885 மாணவ, மாணவிகள் தற்போது படிக்கின்றனர். உதவி பேராசிரியர்கள் உட்பட 26 நிரந்தர பேராசிரியர்கள், மாதம் ரூ. 25 ஆயிரம் சம்பளத்தில் 15 உதவி பேராசிரியர்களும், ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 75க்கும் மேற்பட்ட கவுர விரிவுரையாளர்களும் என, 135 பேரும், 36 ஆசிரியரல்லாத அலுவலர்கள், பணியாளர்களும் பணிபுரிகின்றனர். கிராமப்புறப்புற ஏழை மாணவர்கள் பெரிதும் பயன்பெறும் வகையில் இயங்கும் இக்கல்லூரியின் வளாகம், வகுப்புறைகள், ஆடிடோரியம் உள்ளிட்ட பகுதிகள் போதிய பராமரிப்பு இன்றி இருந்தன.
இந்நிலையில், கடந்த ஒருமாதத்திற்கு முன்பு, புதிதாக இக்கல்லூரிக்கு காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் புவனேசுவரன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரது முயற்சியால் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமாரின் அனுமதியுடன் இக்கல்லூரி முழுவதும் புது பொலிவு பெறும் விதமாக சீரமைக்கப்படுகிறது. வகுப்பறைகள், ஆடிடோரியம், முதல்வர் அலுவலகம், அலுவலக பகுதி, ஆசிரியர்களுக்கான அறைகள், கழிப்பறைகள் என அனைத்துப் பகுதிகளும் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு வரவேண்டும், பாகுபாடு தவிர்த்தல் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு, கல்லூரி வளர்ச்சிக்கென சிறப்புக் குழுக்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகைளை துணை வேந்தர் ஜெ.குமார் நேரில் ஆய்வு செய்தார்.
முதல்வர் புவனேசுவரன் கூறியது, “சாதாரண ஏழை மாணவர்கள் பயிலும் இக்கல்லூரியை தனியார் கல்லூரிக்கு இணையான கல்லூரியாக மாற்றும் விதமாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம். கல்லூரி வளாகத்தை பார்த்தாலே இங்கு படிக்கவேண்டும், சேரவேண்டும் என்ற ஆசை பெற்றோர், மாணவர்களுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்படும்.
பல துறையில் பணிபுரியும் இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள், பெரும் நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டி கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். விரைவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பை நடத்த உள்ளோம். அடுத்த ஆண்டு கூடுதல் மாணவர்களை சேர்க்க இலக்கு வைத்துள்ளோம்.
பிகாம் -சிஏ, எம்பிஏ, எம்காம்- சிஏ ஆகிய கூடுதல் பாடப்பிரிவுகளை தொடங்குவோம். கல்லூரியை புதுப்பித்தல், அனைத்து நடைமுறைகளை இணைய வழியில் செயல்பாடு குழு, நிதி திரட்டுதல் குழு, பிற கல்லூரிகளுடன் தொடர்புக் குழு, ராக்கிங், மாணவிகள், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு விசாகக்கமிட்டி,, தரமதிப்பீட்டுக்குழு, தேர்வுக்குழு, விளையாட்டுக்குழு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் குழு, பல்வேறு குழுக்களும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கையால் தனியார் கல்லூரி இணையான கல்லூரியாக மாறும் என நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT