Published : 29 Dec 2022 04:57 AM
Last Updated : 29 Dec 2022 04:57 AM
சென்னை: உயர்கல்வியில் சேர்வதற்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட 15 தேசிய நுழைவுத் தேர்வுகளை எழுத விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் (பொறுப்பு) க.இளம் பகவத்,அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 2023-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதத்துக்குள் நீட், ஜேஇஇ, க்யூட், நாட்டா உட்பட 15 வகையான தேசிய நுழைவு தேர்வுகள் நடக்க உள்ளன.
இத்தேர்வுகளை எழுத விரும்பும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அந்தந்த பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
நுழைவு தேர்வுகளுக்கான விண்ணப்ப பதிவு, அதற்கான கட்டணம், கல்வித் தகுதி, அணுகுவதற்கான இணையதளம், தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்து இயக்குநரகம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதைக் கொண்டு, விருப்பம் உள்ள மாணவர்களை விண்ணப்பிக்க ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்துதர வேண்டும்.
இதுதொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT