Published : 28 Dec 2022 04:10 AM
Last Updated : 28 Dec 2022 04:10 AM
சென்னை: சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கான முதல் நாள் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 89 பேர் உட்பட 179 மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேருவதற்கான இடஒதுக்கீட்டு ஆணையை பெற்றனர்.
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கு 5 அரசு கல்லூரிகள் உள்ளன. அவற்றில் உள்ள 330 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 280 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இதேபோல் 26 தனியார் கல்லூரிகளில் உள்ள 1,990 இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.
மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசு கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்த படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், 2022-23 கல்வியாண்டில் சித்தா, யுனானி, ஆயுர்வேத, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னையில் நேற்று தொடங்கியது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவில் 13 பேர், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 89 பேர், பொதுப் பிரிவில் 77 பேர் என மொத்தம் 179 பேர் சேர்க்கை ஆணையை பெற்றனர்.
இந்த ஆணைகளை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ் வழங்கினார். இணை இயக்குநர் பார்த்திபன், தேர்வுக்குழு செயலாளர் மலர்விழி ஆகியோர் உடன் இருந்தனர். ஜன.4-ம் தேதி வரை (டிச.31, ஜன.1, 2 தவிர்த்து) கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT