Published : 28 Dec 2022 04:55 AM
Last Updated : 28 Dec 2022 04:55 AM

பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் 5 மாதங்களில் 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றனர்

சென்னை: பள்ளி இல்ல நூலகத் திட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் நூலகங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக உள்ளன. இந்தப் புத்தகங்களை மாணவர்கள் பள்ளிகளிலேயே அமர்ந்து படித்து திரும்ப ஒப்படைத்து வந்தனர்.

இந்நிலையில் மேயர் பிரியா, ``சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் `பள்ளி இல்ல நூலகத் திட்டம்' செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்'' என அறிவித்திருந்தார்.

அத்திட்டத்தின்படி சென்னைப் பள்ளிகளில் 4-ம் வகுப்புமுதல் 12-ம் வகுப்புவரை பயிலும்மாணவர்கள் பள்ளி நூலகங்களிலிருந்து கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, இலக்கியம், பொது அறிவு உள்ளிட்ட புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று படித்துப் பயன்பெறும் வகையில் `பள்ளி இல்ல நூலகத் திட்டம்' கடந்த ஆகஸ்டு மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு வாரமும் இப்பள்ளி நூலகங்களிலிருந்து புத்தகங்களை விரும்பிப் பெற்று பயனடையும் மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் மூலம் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் வரை (5 மாதங்களில்) 25 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்துச் சென்று வாசித்துப் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x