Published : 26 Dec 2022 05:02 AM
Last Updated : 26 Dec 2022 05:02 AM
சென்னை: சென்னை தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், இளநிலை சித்த மருத்துவப் படிப்பு தொடங்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தாம்பரம் சானடோரியத்தில் 14.78 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை 2005-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கிவைத்தார். அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்ற பெயரில் இயங்கி வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் அமைந்துள்ளது. மேலும், 200 படுக்கைகளுடன் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். தினமும் 2,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். மேலும், இங்கு 8 சித்த மருத்துவத் துறைகளில் எம்.டி. சித்தா மேற்படிப்பும், 6 துறைகளில் பிஎச்.டி. சித்த மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.
இங்கு இளநிலை சித்த மருத்துவப் படிப்பு தொடங்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2022-23) இளங்கலை சித்த மருத்துவப் பட்டப் படிப்பு (பிஎஸ்எம்எஸ்) தொடங்க மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகமும், இந்திய மருத்துவமுறைகளுக்கான தேசிய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நாட்டிலேயே மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் முதல்முறையாக இளநிலை சித்த மருத்துவப் படிப்பு இங்கு தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநரும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்குநருமான ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:
இளநிலையில் 60 இடங்கள்
நடப்பு கல்வி ஆண்டில் 60 இடங்களுடன் பிஎஸ்எம்எஸ் பயிற்றுவிக்க அனுமதி கிடைத்துள்ளது. இதில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். எஞ்சிய 30 இடங்களை மருத்துவ நிறுவனம் கலந்தாய்வு நடத்தி நிரப்பும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆயுஷ் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மருத்துவ நிறுவனம் நடத்தும் கலந்தாய்வுக்கு நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்க உள்ள மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திலேயே கல்லூரி செயல்படத் தொடங்கும். அருகில் உள்ள சிட்லபாக்கத்தில் மருத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம்உள்ளது. அங்கு கல்லூரிக்கு புதியகட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பணி முடிந்த பிறகு, அங்கு கல்லூரி செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் சென்னை அரும்பாக்கம் அறிஞர்அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகம், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 160 இடங்களும், 9 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் 490 இடங்களும் இளநிலை சித்த மருத்துவப் படிப்புக்கு உள்ளன. இவற்றுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ளது.
இதற்கிடையே, சென்னை மாதவரத்தில் 25 ஏக்கரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதேபோல, அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசிடம் தமிழகஅரசு முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT