Published : 20 Dec 2022 04:20 AM
Last Updated : 20 Dec 2022 04:20 AM
மதுரை: நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ் விரிவுரையாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வில் தமிழில் கேட்கும் வினாக்களில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே, பிற பாட வினாக்களும் மதிப்பீடு செய்யப்படும் என்ற புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தி, அதிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்ற திட்டம் நடப்புக் கல்வியாண்டில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழரும், தொழில்நுட்பமும், தமிழர்களின் மரபுகள் எனும் தலைப்பில் 2 செமஸ்டர்களுக்கு படிக்க வேண்டும். தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள் தவிர, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இரண்டு செமஸ்டரிலும் தலா 15 மணி நேரம் இதற்கான வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக துறைகளில் 6 பேரும், பல்கலைக்கழகத்துக்கு உட்பட 17 உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்விரிவுரையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தற்காலிக விரிவுரையாளர்களை தேர்ந்தெடுக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட் டுள்ளன.
இளநிலை, முதுகலை தமிழ் பட்டத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் அல்லது இணையான கிரேடு மற்றும் பிஎச்டி, அல்லது பிஏ, எம்ஏ தமிழ் பாடத்தில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் அல்லது நெட், ஸ்லெட், செட் ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி இதற்கான கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் தலா 100-க்கும்மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்று (டிச.20) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
(dirtamildvt@annauniv.edu). நேர்காணலுக்கு பின்னர் விரைவில் தமிழ் விரிவுரையாளர்கள் நிய மிக்கப்படுவர் என பொறியியல் கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: நடப்பு கல்வி யாண்டில் பொறியியல் கல் லூரிகளில் முதலாமாண்டு முதல் செமஸ்டரில் தமிழரும், தொழில்நுட்பமும், 2-வது செமஸ்டரில் தமிழர் மரபு என்ற தலைப்பில் தமிழ் கற்றல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 17 கல்லூரிகளில் ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் தகுதியானவர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று கடைசி தேதி என்ற போதிலும், கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதன் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பணி கிடைக்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT