Published : 14 Dec 2022 04:12 AM
Last Updated : 14 Dec 2022 04:12 AM
சென்னை: டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் உண்மைத்தன்மையை அந்தந்த மாவட்டங் களிலேயே சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெட் தேர்வர்கள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த மாவட்டங்களிலேயே சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கை: இதுகுறித்து ஆசிரியர் தேர்வுவாரியம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2012-ம் ஆண்டு நடந்தடெட் தேர்வில் பங்கேற்றவர்களின் விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் டெட் தேர்வு எழுதிய நபர்களின் விவரங்களுடன் சரிபார்த்து அதை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், சான்றுகளின் உண்மைத் தன்மை கோரி கருத்துருக்கள் தேர்வு வாரியத்துக்கு வருகின்றன.
4 ஆண்டு ‘டெட்’ தேர்வு விவரம்: இதையடுத்து டெட் தேர்வுஎழுதியவர்களின் விவரங்கள் மீண்டும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, 2012, 2013, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெட் தேர்வுகளுக்கான சான்றிதழ் திருத்தங்கள், உண்மைத் தன்மை அறிதல் ஆகியவை அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இதுசார்ந்த எந்த கருத்துருவையும் தேர்வு வாரியத்துக்கு அனுப்பக் கூடாது. இதுதொடர்பாக மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT