Published : 22 Nov 2022 06:19 PM
Last Updated : 22 Nov 2022 06:19 PM
தேனி: விண்வெளி வீராங்கனை ஆகவேண்டும் என்ற இலக்குடன் தேனியைச் சேர்ந்த மாணவி பொருளாதார நெருக்கடிக்கும் மத்தியிலும் வான்வெளியில் தடம் பதிக்கும் ஆர்வத்தில் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வரும் ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவில் பைலட் பயிற்சி பெற செல்கிறார்.
தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமோதரன் - அமுதா தம்பதியரின் ஒரே மகள் உதயகீர்த்திகா. பள்ளிப் பருவத்திலே இவருக்கு விண்வெளி வீராங்கனையாக ஆக வேண்டும் என்ற உந்துதல் இருந்துள்ளது. 10-ம் வகுப்பு படிக்கும்போது இஸ்ரோ சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விண்வெளி ஆராய்ச்சியின் பங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். இதன்மூலம் இஸ்ரோ மையத்தை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் பிளஸ் 2 படிக்கும் போது நடந்த போட்டியிலும் வென்றதால் இஸ்ரோவிற்கு இரண்டாம் முறையாக சென்றார்.
அப்போது பல விஞ்ஞானிகளை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அரசு உதவிப் பெறும் பள்ளியில் பயின்ற தமிழ்வழி கல்வி மாணவியின் அறிவியல் ஆர்வமும், ஆய்வுத்திறனும் அவர்களை ஆச்சரியப்படுத்தியது. இதற்காக இவரைப் பாராட்டி சந்திராயன் 1 செயற்கைக்கோள் வடிவத்தில் இவருக்கு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த ராக்கெட்டை சுற்றிப் பார்த்தார். ராக்கெட் உருவாக்கம், அதன் பாகங்கள், இயங்கும் விதம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கிக் கூறினர்.
விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்ற தனது கனவை அவர்களுடன் பகிர்ந்து வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் விமானப்படை பல்கலைக்கழகத்தில் ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் சேர்ந்து விண்வெளிக்கான 4 ஆண்டு பயிற்சியை முடித்தார்.
இதுகுறித்து உதயகீர்த்திகா கூறுகையில், "பொருளாதார சிக்கல் இருந்ததால் மிகவும் சிரமப்பட்டேன், அங்கு உக்ரைனி, ரஷ்யன்தான் பேசுவார்கள். குளிர்காலத்தில் மைனஸ் 30டிகிரி வரை பருவநிலை இருக்கும். பல சிரமங்கள் இருந்தாலும் இலக்கை நோக்கி வெறியுடன் பயணித்தேன். போலந்தில் இறுதியாண்டு பயிற்சி நடந்தது.
அங்கு விண்வெளிச்சூழலை எதிர்கொள்ளும் மூன் அனலாக் மிஷன், மார்ஸியன் அனலாக் மிஷன், வானில் மிதந்து கொண்டே பணிகளை செய்வதற்கான ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட 10 வித பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் சென்ட்ரி பியூஜ் எனும் பயிற்சி மிக மிக கடினமாக இருந்தது. பூமிக்கு எதிர்திசையில் விண்வெளி நோக்கிச் செல்கையில் புவிஈர்ப்பு விசை கீழே இழுக்கும். அதனை எதிர்கொள்வதற்கான தகுதி உடலுக்கு இருக்கிறதா என்பதை சோதிக்கும் பயிற்சிதான் இது.மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து மயக்கத்தை ஏற்படுத்தும் மிக மிக கடினமான பயிற்சி. இதையும் வெற்றிகரமாக முடித்தேன்.
ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு பயிற்சி பெறுவார்கள். முதன்முதலாக வெளிநபராக பயிற்சி பெற்றதுடன் இங்கு பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற அங்கீகாரமும் எனக்குக் கிடைத்தது. பைலட் பயிற்சியும் விண்வெளி வீரர்களுக்கு கூடுதல் தகுதியாக இருப்பதால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகானஸ்பேர்க் எனும் இடத்தில் உள்ள மேக் 1 ஏலியேசன் அகாடமிக்கு செயல்முறை பயிற்சிக்காக விண்ணப்பித்து இருந்தேன். இதற்கான அனுமதியும் கிடைத்துள்ளது. வரும் ஜனவரியில் பயிற்சி தொடங்க உள்ளது" என்றார்.
தற்போது விசா கிடைத்துள்ளநிலையில் பொருளாதார நெருக்கடியால் பரிதவித்து வருகிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ”பலரிடையே கிடைத்த உதவியால் பைலட் பயிற்சி பெறுவதற்கான முதல்கட்ட தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது. இருப்பினும் இன்னமும் ரூ.20லட்சம் வரை தேவைப்படுகிறது. தமிழக அரசிடமும் இது குறித்து உதவி கேட்டிருக்கிறோம். சமூக வலைதளங்களில் எனது நிலையையும், இலக்கையும் அறிந்து பலரும் உதவிக் கொண்டிருக்கின்றனர். எப்படியும் பயிற்சி முடித்து விண்வெளி வீராங்கனையாக வாகை சூடுவேன்” என்றார்.
இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே இத்துறையில் தடம்பதிந்திருந்த நிலையில், நேரடியாக இந்தியாவில் இருந்து ஒரு மாணவி தொடர்முயற்சியால் விண்வெளியை தொட்டுவிடும் தூரத்திற்கு வந்துள்ளார். விரைவில் அண்டவெளி பதிவுகளில் இவரது சாதனைகள் அழுத்தமாய் பதிவுபெறும் என்று நண்பர்களும், உறவினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT