Published : 07 Nov 2022 04:15 AM
Last Updated : 07 Nov 2022 04:15 AM

தேசிய அளவிலான சாகச முகாமில் பங்கேற்க திருப்பூர் அரசு கல்லூரி மாணவி தேர்வு

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் மாணவி, தேசிய அளவிலான சாகச முகாமில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவி களுக்கு சாகசப் பயிற்சி வழங்க மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக 10 நாட்கள் கொண்ட தேசிய அளவிலான சாகச முகாம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா நார்கண்டா பகுதியில் நேற்று (நவ.6) தொடங்கியது.

வரும் 15-ம் தேதிவரை நடைபெறவுள்ள இம்முகாமில், மாணவ, மாணவிகளுக்கு மலையேற்றப் பயிற்சி, ஆற்றைக் கடக்கும் பயிற்சி, இரவு வழி செலுத்துதல், தாவரங்கள், விலங்குகளை கண்டுபிடித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த முகாமுக்கு 10 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவி வனபார்வதி (விலங்கியல் துறை 3-ம் ஆண்டு) தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் இம்முகாமுக்கு இவர் மட்டுமே தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் வனபார்வதியை வாழ்த்தி தேசிய முகாமுக்கு வழியனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x