Published : 18 Oct 2022 09:38 AM
Last Updated : 18 Oct 2022 09:38 AM
மருத்துவப் படிப்பு முடித்ததும் கிராமப்பகுதியில் சேவையாற்ற விரும்புவதாக, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்ற ஈரோடு மாணவி தேவதர்ஷினி தெரிவித்தார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7. 5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான தரவரிசை பட்டியலில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, தேவதர்ஷினி 518 மதிப்பெண்களுடன் முதல் இடம் பெற்றுள்ளார்.
கவுந்தப்பாடியை அடுத்த பொம்மன்பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி -கோடீஸ்வரி தம்பதியின் இரண்டாவது மகள் தேவதர்ஷினி. கவுந்தப்பாடி அரசு பெண்கள் பள்ளியில் படித்த தேவதர்ஷினி கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தனியார் பயிற்சி மையம் மூலம் பயற்சி பெற்று இந்த ஆண்டு நீட் தேர்வில் 518 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார்.
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில், முதலிடம் பெற்று தேர்வாகியுள்ள தேவதர்ஷினி கூறியதாவது: எங்களது குடும்பம் நெசவுத்தொழிலை ஆதாரமாகக் கொண்டது. எனது தந்தை காலமான நிலையில், அங்கன்வாடி உதவியாளராக பணிபுரியும் என் தாய் கோடீஸ்வரி, நான் மருத்துவராக வேண்டும் என்று விரும்பினார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வில் வெற்றி பெற்று, தற்போது தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க விரும்புகிறேன். நான் கிராமப்புறத்திலேயே பிறந்து வளர்ந்தவள் என்பதால், எம்பிபிஎஸ் முடித்ததும் எங்களது பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்ற விரும்புகிறேன் என்றார். தேவதர்ஷினி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT