Published : 18 Oct 2022 04:51 AM
Last Updated : 18 Oct 2022 04:51 AM

நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற மதுரை மாணவர் முதலிடம் - எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். உடன் சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் ஆர்.முத்துச்செல்வன் உள்ளிட்டோர். படம்: பு.க.பிரவீன்.

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். இப்பட்டியலில் மதுரை மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள், 18 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் கடந்த டிசம்பர் 19-ல் தொடங்கி, கடந்த 7-ம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் நேற்று வெளியிட்டார்.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 24,054பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 13,207 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 30-வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்த மதுரை கே.கே.நகர் மாணவர் எஸ்.திரிதேவ் விநாயகா, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கோவை மாணவி எம்.ஹரிணி 702 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், சென்னை மேற்குமாம்பலம் மாணவர் பி.சொக்கலிங்கம் 700 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 690 மதிப்பெண்கள் எடுத்து தேஜஸ்வா அகர்வால், தீரஜ் கோபல், அன் மேரி ஜாக்கப் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள்

அரசு ஒதுக்கீட்டு இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் உள்ளன. இந்தஇடங்களுக்கு 2,695 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,674 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதற்கான தரவரிசைப் பட்டியலையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.

ஈரோடு மாவட்ட மாணவி வி.தேவதர்ஷினி 720 மதிப்பெண்களுக்கு 518 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். சென்னை குரோம்பேட்டை மாணவர் பி.சுந்தர்ராஜன் 503 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தையும், வேலூர் மாவட்ட மாணவர் இ.பிரவீன்குமார் 481 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து, அமைச்சர் பேசும்போது, ‘‘எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக். 19-ம் தேதி (நாளை) தொடங்குகிறது. வரும் 25-ம் தேதி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. வரும் 21 முதல் 27-ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெற உள்ளது.

வரும் 26-ம் தேதி, முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்படும். 27, 28-ம்தேதிகளில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். 30-ம் தேதி, முதல் சுற்றின் இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன் பின்னர், அடுத்தகட்ட கலந்தாய்வுகள் நடைபெறும்.

நவ.15-ல் வகுப்புகள் தொடங்கும்

அக்.19-ம் தேதி ராணுவ வீரர்கள்வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வும், 20-ம் தேதி அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு கலந்தாய்வும் சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறும். மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் நவ. 15-ம் தேதி தொடங்கும்.

முதல்வரின் தீவிர முயற்சியால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டப்படி செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வானவர்களுக்கு பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் இந்த ஆண்டும் வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x