Published : 17 Oct 2022 04:40 AM
Last Updated : 17 Oct 2022 04:40 AM
தமிழகத்தில் முதல் முறையாக ஒரே ஆண்டில் 9 தலித் மாணவர்கள், உதவித் தொகை அடிப்படையில் லண்டன், கொரியா பல்கலைக்கழகங்களில் பி.எச்டி. படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு 10 ஆண்டுகளில் 3 பேர் மட்டுமே பயன் பெற்றிருந்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பல்லைக்கழகங்களில் கல்வி உதவித் தொகை மூலம் பொறியியல், அறிவியல் பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப் படிப்புகளை படிக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இத்திட்டத்தில் 2012-2013 முதல் 2019-2020 நிதியாண்டு வரையிலான 8 ஆண்டுகளில் வெறும் 18 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அதில் 3 மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த படிப்புக்காக 8 ஆண்டுகளில் வெறும் ரூ.2,65,83,000 நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அதில் ரூ.1,66,79,000 மட்டுமே பயன்படுத்தி உள்ளாகவும், மீதி ரூ.99,04,000 பயன்படுத்தப்படவில்லை என்றும் மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவலை செப்.6-ம் தேதி `இந்து தமிழ் திசை' வெளியிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கார்த்திக் ஆதி திராவிடர் நலத் துறைக்கு புகார் மனு அனுப்பினார். மேலும் உயர் நீதிமன்றக் கிளையிலும் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இதன் எதிரொலியாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஆதி திராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிடர் இன மாணவர்களுக்கு வெளிநாடு சென்று உயர் கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் மறு சீரமைக்கப்பட்டது.
மேலும் அது தொடர்பான தகுதித் தேர்வு நடத்த 500 மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.64 கோடி செலவில் பயிற்சி வழங்கவும், மாணவர்கள் தான் விரும்பும் வெளிநாட்டுக் கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பு தொடர கல்வி உதவித் தொகை சுமார் ரூ.36 லட்சம் வீதம் பத்து மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி உதவித் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக மொத்தம் ரூ.5.24 கோடி ஒதுக்கப்பட்டது.
இதன்படி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை விண்ணப்பித்திருந்த 24 மாணவர்களில் 9 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க இத்திட்ட தேர்வுக் குழு பரிந்துரை செய்து 9 மாணவர்களும் தற்போது வெளிநாடுகளில் படிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்காக ஆதி திராவிடர் நலத் துறை முதற்கட்டமாக ரூ.1,99,33,542 நிதி ஒதுக்கி உள்ளது.
இதன் மூலம் லண்டன், கொரியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இந்த மாணவர்கள் படிக்கத் தேர்வாகியுள்ளனர். தமிழக வரலாற்றில் ஆதிதிராவிடர் நலத் துறை ஏற்பாட்டில் இவ்வளவு மாணவர்கள் ஒரே ஆண்டில் வெளிநாடுகளுக்குப் படிக்க அரசு செலவில் தேர்வாகியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து ஆண்டுக்கு நூறு மாணவர்கள் அரசு செலவில் வெளிநாடுகளில் படிக்கச் செல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார் ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT