Published : 06 Oct 2022 08:48 PM
Last Updated : 06 Oct 2022 08:48 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் வெளிப்படை தன்மையுடன் 3ம் கட்ட கலந்தாய்வு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் இறுதி கட்டமாக கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற இருந்த 3-ம் கட்ட கலந்தாய்வு முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடம், கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால், அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையில், இறுதி கட்டமாக சுமார் 758 இடங்களுக்கு கடந்த மாதம் 30-ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, இளைஞர்கள், கடந்த 1-ம் தேதி மீண்டும் சாலை மறியல், முற்றுகை மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கலந்தாய்வு மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டது என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
டோக்கன் விநியோகம்:
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியை இன்று (6-ம் தேதி) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். விசிக மாவட்டச் செயலாளர் செல்வம், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் தமிழ்பாரதி, மாவட்டச் செயலாளர் கோபிநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், ஒன்றிய செயலாளர் ராமதாஸ், நகர செயலாளர் பிரகலநாதன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் பேசும்போது, “அரசியல் கட்சி பிரமுகர் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, 3-ம் கட்ட கலந்தாய்வில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. ஒரு இடத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு, திராவிட மாடல் அரசின் கொள்கையை நிலைநாட்ட வேண்டும்” என்றனர்.
போராட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை:
இதற்கிடையில், போராட்ட குழுவுடன் கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநர்கள் ராவணன்(சென்னை), காவேரியம்மாள்(வேலூர்) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், "3-ம் கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள 136 இடங்களுக்கு வரும் 11-ம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். முறைகேடு செய்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
பின்னர் பேசிய போராட்டக் குழுவினர், "கலந்தாய்வு மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டது என அறிவித்த பிறகு, தற்போது 136 இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிவிப்பது முரண்பாடாக இருக்கிறது. எனவே, 3-ம் கட்ட கலந்தாய்வை ரத்து செய்துவிட்டு, மறு கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும் முதுகலை படிப்புக்கான கலந்தாய்வை நேர்மையாக நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும்” என்றனர்.
உயர் அதிகாரிக்கு பரிந்துரை:
இது குறித்து, இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் மண்டல இணை இயக்குநர் காவேரியம்மாள் கூறும்போது, “வெளிப்படை தன்மையுடன் 136 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை வரும் 11-ம் தேதி நடத்தப்படும். கலந்தாய்வில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக் குழுவினர் மனு கொடுத்துள்ளனர். இந்த மனு, உயர் கல்வித் துறையின் உயர் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.
கலந்தாய்வு மூலம் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 136 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்திருப்பது முரணாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த காவேரியம்மாள், முழுமையான ஆய்வுக்குப் பிறகு, 136 இடங்கள் காலியாக இருப்பது கண்டறியப்பட்டதால், இவ்வாறு தெரிவித்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT